வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுடன் ஒரு மைனர் வீராங்கனை உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக, முன்னாள் இந்திய சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்கை கைதுசெய்யக்கோரி, பல மாதங்களாக மல்யுத்த வீராங்கனைகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மாதங்களை கடந்து தெருவில் இறங்கி போராடிய போதும் பிரிஜ் பூஷன் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதனால் விரக்தியடைந்த வீரர்கள் நாட்டிற்காக தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச முடிவுசெய்தனர். ஆனால் பதக்கங்களை ஆற்றில் வீசுவதற்கு முன்னர் அதை தடுத்த விவசாயிகள் சங்க தலைவர் நரேஷ் திகாயத் வீராங்கனைகளிடம் பேசி பதங்க்கங்களை பெற்றுக்கொண்டு சென்றார்.
இந்த பரபரப்பு சம்பவத்தால் விவகாரம் பெரிதான நிலையில், ”நாங்கள் இந்தியாவில் நடப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்” என சர்வதேச மல்யுத்த நிர்வாக அமைப்பான United World Wrestling செய்திவெளியிட்டது. இந்நிலையில் தான் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு வீராங்கனைகள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்.
பிரிஜ் பூஷன் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் நிர்வாகிகள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பின்னும், குறிப்பிட்ட காலத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உயர்பதவிகளுக்கான தேர்தலை நடத்த தவறியதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பினை இடைநீக்கம் செய்தது சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு (UWW).
இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனை அனிதா ஷியோரனுக்கும், உத்திரப்பிரதேச மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவரான சஞ்சய் சிங்கும் இடையே போட்டி நிலவியது. பாலியல் குற்றங்களுக்கு ஆளான மல்யுத்த வீரர்களின் ஆதரவு முன்னாள் வீராங்கனை அனிதா ஷியோரனுக்கே இருந்தது. அவர்கள் ஒரு பெண் தலைவர் சம்மேளனத்திற்கு தேவையென்பதில் உறுதியாக இருந்தனர். அவர்களுக்கு ஆதரவு கிடைக்கு என்ற நம்பிக்கையிலும் இருந்தனர்.
தேர்வு நடந்துமுடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதில் மல்யுத்த வீராங்கனைகள் எதிர்ப்பார்க்காத வகையில் 47 எண்ணிக்கையில், முன்னாள் வீராங்கனை அனிதா ஷியோரனுக்கு 7 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் புதிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாலிக், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பத்தினரையும் நெருங்கிய உதவியாளர்களையும் தலைமை பொறுப்பிற்கு அனுமதிக்க மாட்டோம் என்று விளையாட்டு அமைச்சகம் மல்யுத்த வீரர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உத்தரப்பிரதேச மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சய் சிங், பிரிஜ் பூஷன் சிங்கின் தீவிர விசுவாசி என்று கூறினார்.
கண்ணீருடன் உடைந்து பேசிய சாக்ஷி, “நாங்கள் 40 நாட்கள் போராட்டத்தில் சாலைகளில் தூங்கினோம். நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் எங்களுக்கு ஆதரவாக வந்தனர். பிரிஜ் பூஷன் சிங்கின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் WFI-ன் தலைவராக செயல்பட்டால், நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன்” என்று உடைந்து கூறினார்.
மேலும், “சம்மேளனத்தின் தலைவராக ஒரு பெண் இருக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை வைத்தோம். தலைவர் ஒரு பெண்ணாக இருந்தால், வீராங்கனைகளுக்கு எந்தவிதமான துன்புறுத்தலும் நடக்காது என்பதை நம்பினோம். இதற்கு முன்பு எந்தவித உயர் பதவிகளிலும் பெண்கள் இருந்ததில்லை. தற்போதும் ஒரு பெண்ணுக்கு கூட பதவி வழங்கப்படவில்லை. கொடுமைகளுக்கு எதிராக நாங்கள் முழு வலிமையுடன் போராடினோம், இந்த சண்டை இத்துடன் நின்றுவிடாமல் நிச்சயம் தொடரும். அடுத்த தலைமுறை மல்யுத்த வீரர்கள் நல்ல எதிர்காலத்திற்கு போராட வேண்டும்” என்று கூறிவிட்டு அழுதபடியே வெளியேறினார்.