ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஓப்பனர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
மிக நிதான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தியதால் ஸ்கோர் மந்தமாக உயரத் துவங்கியது. ஆனால் ஆட்டம் சூடு பிடிக்கும் முன்பே ஷமியிடம் சிக்கி கான்வே அவுட்டாகி நடையைக் கட்டினார். அடுத்து வந்த மொயின் அலியும் நிதான ஆட்டத்தையே கடைபிடித்தார். யாஷ் தயாள் வீசிய 5-வது ஓவரில் சென்னை அணியின் முதல் பவுண்டரியை விளாசினார் ருதுராஜ். ரஷித் கான் வீசிய 6வது ஓவரில் தொடர்ந்து இரு சிக்ஸர்களை விளாசியதால் பவர்பிளே முடிவில் 47-1 என்ற அருமையான ஸ்கோரை எட்டியது சென்னை அணி.
ஆனால் சென்னையின் வேகத்திற்கு அல்சாரி ஜோசப்பும் ரஷீத் கானும் ஸ்பீட் பிரேக்கர் போட்டனர். இந்த அழுத்தத்தில் சாய் கிஷோர் பந்துவீச்சில் அவுட்டானார் மொயின் அலி. அடுத்து வந்த ஜெகதீசன், கெய்க்வாட் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்ததால் ஸ்கோர் மீண்டும் மந்தமாக உயரத் துவங்கியது. மிக பொறுமையாக விளையாடிய ருதுராஜ் 44 பந்துகளில் அரைசதம் விளாசினார். அடுத்த ஓவரில் ரஷீத் கானிடம் அவுட்டாகி வெளியேறினார் ருதுராஜ். அடுத்து வந்த ஷிவம் துபே ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனதால் சென்னை அணி மிக முக்கியமான டெத் ஓவர்களில் நெருக்கடிக்கு ஆளானது.
அடுத்து வந்த தோனியும் பொறுமையாக விளையாடி 10 பந்துகளை சந்தித்து 7 ரன்களை மட்டுமே எடுத்து ஷமி பந்துவீச்சில் வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது சென்னை அணி. 16 முதல் 20 ஓவர் வரையிலான டெத் ஓவர்களில் சென்னை விளாசிய பவுண்டரிகள், சிக்ஸர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம். 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஓப்பனர்களாக விருத்திமான் சஹா, சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர்.
முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரில் பவுண்டரி விளாசி ரன் கணக்கை துவக்கியது குஜராத் அணி. மேலும் இரு பவுண்டரிகளை விளாசி சென்னையின் பவுலிங்கை நெருக்கடிக்கு ஆளாக்கினார் சஹா. முகேஷ் வீசிய 3வது ஓவரிலும் சஹா இரு பவுண்டரிகளை விளாசி அதகளம் செய்தார். சாண்ட்னர், சிம்ரஜித் சிங் என அனைத்து பவுலர்களின் பந்தையும் வெளுத்து வாங்கினார் சஹா. 5-வது ஓவர் வரை நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த சுப்மான் கில், சாண்ட்னர் இரு பவுண்டரி விளாசி அதிரடி பக்கம் திரும்பினார்.
ஆனால் இளம் வீரர் மதீஷ பதிரனா வீசிய பந்தில் எல்பிடபுள்யூ ஆகி நடையைக் கட்டினார் கில். அடுத்து வந்த மேத்யூ வேட் அதிரடியாக ஆட்டத்தை துவங்க, ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது. ஆனால் இந்த கூட்டணியால் வெகு நேரம் நீடிக்க இயலவில்லை. மொயின் அலி பந்துவீச்சில் மேத்யூ அவுட்டாகி வெளியேற, கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அதிரடியாக ஆடத் துவங்கிய அவரும் மதிஷா பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார். துவக்கத்தில் அதிரடியாக ஆடிய சஹா, உரிய பார்ட்னர் இல்லாமல் தன் வேகத்தை குறைத்தார். இதனால் 42 பந்துகளில் தான் அவரால் அரைசதம் கடக்க முடிந்தது.
அடுத்து வந்த மில்லருடன் இணைந்து சஹா நிதானமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் 19.1 ஓவரிலேயே இலக்கை எட்டி அசத்தியது குஜராத் அணி. முதல் போட்டியிலேயே அற்புதமாக பந்துவீசிய மதிஷா பரிதனா 3 ஓவர்களில் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து பாண்டியா, மேத்யூ வேட் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.