“'பேட் பேச வேண்டும்.. வாய் அல்ல' .. ஜாம்பவான்களின் அந்த வார்த்தைதான்..” - ஜெய்ஸ்வால்

“'பேட் பேச வேண்டும்.. வாய் அல்ல' .. ஜாம்பவான்களின் அந்த வார்த்தைதான்..” - ஜெய்ஸ்வால்
“'பேட் பேச வேண்டும்.. வாய் அல்ல' .. ஜாம்பவான்களின் அந்த வார்த்தைதான்..” - ஜெய்ஸ்வால்
Published on

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் விளையாடின. இந்திய அணி எளிதில் பங்களாதேஷை வீழ்த்தி கோப்பையை வென்றுவிடும் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், அசத்தலாக விளையாடி பங்களாதேஷ் அணி வெற்றி வாகை சூடியது. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாகக் காணப்பட்டனர். இந்திய வீரர்களை சீண்டும் வகையிலும் சில விஷயங்களை செய்தனர். அதேபோல், இந்திய வீரர்கள் தரப்பிலும் சில வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களுக்கு இடையே லேசான தள்ளு ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.

இதனிடையே, தனக்கு எதிராக பங்களாதேஷ் வீரர்கள் சிலர் கோபத்தைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டபோதும், இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் பொறுமையுடன் நடந்து கொண்டார். அவரது பக்குவமான பண்பு அனைவரையும் கவர்ந்தது. உலகக் கோப்பை முழுவதும் சிறப்பாக விளையாடிய அவர் தொடர் நாயகன் விருதினையும் பெற்றார். இறுதிப் போட்டியிலும், 121 பந்துகளை சந்தித்து 88 ரன்களை அவர் அடித்தார். சுமார் 170 நிமிடங்கள் ஜெய்ஸ்வால் களத்தில் பேட்டிங் செய்தார்.

இந்நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பொறுமையுடன் நடந்து கொண்டது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ஜெய்ஸ்வால் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் என்னிடம் ஒரு விஷயத்தை தெரிவித்து இருந்தார்கள்.

அது என்னவென்றால், ‘உன்னுடைய பேட் தான் பேச வேண்டும், வாய் அல்ல’ என்பதுதான். அதனால், இந்த ஆலோசனையை எப்போதும் நான் முதன்மையாகக் கருதுகிறேன். அதனால்தான் நான் தொடர்ச்சியாக அமைதியாக இருந்தேன். என்னைத் தூண்டும் வகையில் பங்களாதேஷ்க்கு எதிரான இறுதிப்போட்டியில் நிறைய விஷயங்கள் நடைபெற்றாலும் அதனை நான் கண்டுகொள்ளவில்லை. அப்போது நான் புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதுமட்டும்தான் என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய பேட்டிங் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியை அளித்தது. இந்திய அணி கோப்பையை வென்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதுவொரு மிகப்பெரிய அனுபவம். பல்வேறு கால நிலைகளில் வித்தியாசமான மைதானங்களில் விளையாடினேன். நெருக்கடியை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதுதான் நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம்” என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com