உலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு

உலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு
உலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு
Published on

இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை 29 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பதிவு செய்திருந்தார். 

இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் உலகில் பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் இவர் தான் முதலிடம் வகிக்கிறார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்த்து சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 100 சதங்களை அடித்துள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 

இந்நிலையில் 29 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை இதே நாளில் பதிவு செய்தார். சச்சின் டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவர் அந்தத் தொடரில் சதம் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்தப் போட்டியில் 119 ரன்கள் எடுத்து இந்தியா அணி அப்போட்டியை டிரா செய்ய முக்கிய காரணமாகவும் சச்சின் இருந்தார். 

அத்துடன் 17 வயதில் சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் குறைந்த வயதில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம்பிடித்தார். இந்தச் சதம் சரியாக 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அடிக்கப்பட்டது. இதுகுறித்து ஐசிசி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “1990ஆம் ஆண்டு இதே நாளில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 சதங்களின் முதல் சதத்தை பதிவு செய்தார்” எனப் பதிவிட்டுள்ளது. 

அதேபோல் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில், “1990ஆம் ஆண்டு இதேநாளில் உலகமே சச்சின் டெண்டுல்கரின் முதல் சதத்தை பார்த்து ரசித்தது. தனது 17ஆவது வயது லிட்டில் மாஸ்டர் சச்சின் முதல் சதத்தை பதிவு செய்தார்” எனப் பதிவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com