'பென்ஷனை வைத்து காலத்தை ஓட்டுகிறேன்' .. முன்னாள் வீரர் வினோத் காம்ளியின் உருக்கமான பேட்டி!

'பென்ஷனை வைத்து காலத்தை ஓட்டுகிறேன்' .. முன்னாள் வீரர் வினோத் காம்ளியின் உருக்கமான பேட்டி!
'பென்ஷனை வைத்து காலத்தை ஓட்டுகிறேன்' .. முன்னாள் வீரர் வினோத் காம்ளியின் உருக்கமான பேட்டி!
Published on

ரூ.30 ஆயிரம் ஓய்வூதியத்தில்தான் வாழ்ந்துக்கொண்டு வருகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்பளி கூறியுள்ளது பலரையும் கவலையடைய வைத்துள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராக அறியப்பட்டவர் வினோத் காம்ளி. சச்சின் டெண்டுல்கரும், காம்ளியும் மும்பையில் 1988 இல் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனைப்படைத்தனர். இதனையடுத்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்த காம்பளி 1991 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். பின்பு 1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். இதுவரை 104 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள காம்பளி 2477 ரன்களை எடுத்துள்ளார். அதில் 2 சதங்களும், 14 அரை சதங்களும் அடங்கும்.

வினோத் காம்ளியின் ரெக்கார்டுகள் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக இருந்தது. 17 டெஸ்ட்களில் விளையாடியுள்ள அவர் 1084 ரன்களை சேர்த்துள்ளார். அதில் 200 ரன்களை 2 முறையும், 4 சதங்களும், 3 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் அவர் சராசரி 54.2. இப்படி எல்லாம் சரியாக சென்றுக்கொண்டிருந்த காம்பளி எங்கே சறுக்கினார் என்பது இதுவரை தெரியவில்லை. உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தாது, ஒழுக்கமின்மை, சர்வதேசப் போட்டிகளில் 'அவுட் ஆஃப் ஃபாரம்' ஆகியவையே கிரிக்கெட்டில் இருந்து வினோத் காம்ளி ஒதுக்கப்பட்டார் என கூறப்படும். அவர் விளையாடிய காலக்கட்டத்தில் வினோத் கம்பளி கழுத்தில் தங்க செயின், பிரேஸ்லெட், காதில் சிலுவை போன்ற கம்மல் என ஸ்டைலாக இருப்பார்.

இந்நிலையில் இப்போது அவருடைய நிலையை 'மிட் டே' நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் தெரியப்படுத்தி இருக்கிறார். அதில் "நான் இப்போது ஒரு ஓய்வுப்பெற்ற கிரிக்கெட் வீரர். பிசிசிஐ மாதாமாதம் அளிக்கும் ரூ.30 ஆயிரம் ஓய்வூதியத்தை நம்பி வாழ்ந்து வருகிறேன். இதுதான் என்னுடைய ஒரே வருவாய்க்கான வழி. இதற்காக நான் பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஓய்வூதியம் என்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொள்கிறது. ஆனால் எனக்கு இப்போது வேலை தேவையாக இருக்கிறது. இளைஞர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.

மேலும் தொடர்ந்த காம்ளி 'இப்போது கூட மும்பையின் முன்னாள் வீரரான அமோல் முசும்தாரை ரஞ்சி அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை அணிக்கு எப்போது தேவை என்றாலும் நான் இருக்கிறேன். எந்த பொறுப்பை கொடுத்தாலும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த விஷயத்தில் மும்பை கிரிக்கெட் சங்கம் எனக்கு உதவ வேண்டும். எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்களை நான் கவனிக்க வேண்டும். எனக்கு மும்பை கிரிக்கெட் நிறைய கொடுத்து இருக்கிறது. இந்த கிரிக்கெட்டுக்கு நான் வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறேன், அதனால் மும்பை கிரிக்கெட் அணிக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்றார்.

இன்னும் உருக்கமாக பேசிய அவர் "நான் பிறக்கும்போதே பணக்காரன் இல்லை. வறுமை என் குடும்பத்தை சிறு வயதில் வாட்டியது. சில நேரங்களில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருந்திருக்கிறது. இதற்காகவே சார்தாஷ்ராம் பள்ளிக்கு சென்று நண்பர்களை பார்ப்பேன். அப்போது நண்பர்கள் அனைவரும் உணவை பகிர்ந்து அளிப்பார்கள். அப்போதுதான் சச்சின் அறிமுகமாகி எனக்கு பக்கபலமாக நின்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். இந்த கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமே கொடுத்தது. ஒருமுறை ரஞ்சிப் போட்டிக்கு முன்பாக மது அருந்திவிட்டு மறுநாள் அந்தப் போட்டியில் சதமடித்தேன். இப்போது எனக்கு ஏதாவது வேலை கொடுத்தால் மதுப்பழக்கத்தையும் விட தயாராகவே இருக்கிறேன்" என்றார்.

நண்பர் சச்சினுக்கு உங்களின் நிலை தெரியுமல்லவா? அவர் ஏதும் உதவவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த காம்பளி "நான் என்னுடைய நண்பனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு எல்லாமே தெரியும். டெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடெமியில் எனக்கு வேலை கொடுத்து இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சிதான். அவர் என்னுடைய நல்ல நண்பர். எப்போதும் எல்லா காலக்கட்டத்திலும் அவர் என்னுடன் இருந்திருக்கிறார்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com