ருதுராஜ் சொதப்பல்! இஷான் அதிரடி ஆட்டம்! முதல் வெற்றியை தனதாக்குமா இந்திய அணி?

ருதுராஜ் சொதப்பல்! இஷான் அதிரடி ஆட்டம்! முதல் வெற்றியை தனதாக்குமா இந்திய அணி?
ருதுராஜ் சொதப்பல்! இஷான் அதிரடி ஆட்டம்! முதல் வெற்றியை தனதாக்குமா இந்திய அணி?
Published on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற்று வருகிறது.

கட்டாக் மைதானம் சுழலுக்கு சாதகமான ஒரு பிட்ச் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு சராசரி ஸ்கோரே 136 ரன்கள்தான். இந்த பிட்சில் ஒரு ஓவரில் சராசரியாக 7 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஓப்பனர்களாக களமிறங்கினர்.

முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ரபாடாவின் பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் ஒரு ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆட, இஷான் கிஷன் பொறுப்புணர்ந்து அதிரடியாக விளையாடி பந்துகளை நாலாப்புறமும் சிதறவிட்டார்.

நோர்க்கியா வீசிய 4வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார் இஷான். பர்னெல் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரியை இஷான் விளாச ஸ்கோர் உயரத் துவங்கியது. ப்ரெட்டோரியஸ் வீசிய 6வது ஓவரிலும் இஷான் சிக்ஸர் ஒன்றை சிதறடிக்க, பவர்பிளே முடிவில் 42-1 என்ற நிலையில் வலுவாக இருந்தது இந்திய அணி.

ஆனால் நோர்க்கியா வீசிய 7வது ஓவரில் ஒரு பவுண்டரி விளாசிய இஷான், அதற்கு அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து 34 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி வருவதால் ஸ்கோர் மந்தமாக உயர்ந்து வருகிறது. தற்போது 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறது இந்திய அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com