‘அதே சீறும் சிங்கம்தான்’.. லோகோவை மாற்றிய ராயல் சேலஞ்ஜர்ஸ்

‘அதே சீறும் சிங்கம்தான்’.. லோகோவை மாற்றிய ராயல் சேலஞ்ஜர்ஸ்
‘அதே சீறும் சிங்கம்தான்’.. லோகோவை மாற்றிய ராயல் சேலஞ்ஜர்ஸ்
Published on

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு தன்னுடைய புதிய லோகோவை இன்று அறிமுகம் செய்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அணிகளில் முக்கியமான ஒரு அணி ஆர்.சி.பி. எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தலைமையில் இந்த அணி விளையாடி வருகிறது. கடும் முயற்சி செய்தாலும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக இருக்கிறது இந்த அணி. இதனால் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதும் கூட வாடிக்கையாக இருக்கிறது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளும் திடீர் மாற்றத்தை அண்மையில் சந்தித்தன. குறிப்பாக, அந்த அணியின் பெயரிலிருந்த பெங்களூர் நீக்கப்பட்டு ராயல் சேலஞ்சர்ஸ் என மாற்றப்பட்டது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தள கணக்குகளிலும் இந்த மாற்றம் வந்தது.

பெயரை மட்டும்தான் மாற்றினார்கள் என்று பார்த்தால் அனைத்து கணக்குகளின் புரொஃபைல் பிக்சர், கவர் பிக்சர் ஆகியவையும் நீக்கப்பட்டன. இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்ன ? என்று அந்த அணியின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அணி நிர்வாகம், பெயரை மாற்றுவதோடு அணியின் லோகோவையும் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலியும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். ‘போஸ்டர்களை காணவில்லை. கேப்டனிடம் கூட தகவல் தெரிவிக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் தெரியப்படுத்துங்கள்’ என விராட் கோலி அதிர்ச்சியை காட்டினார்.

இந்நிலையில், ஆர்சிபி அணி தனது புதிய லோகோவை இன்று வெளியிட்டுள்ளது. இந்த லோகோவில் சீறும் சிங்கத்தின் உருவம் இருக்கிறது. புதிய லோகோ குறித்து பேசிய ஆர்சிபி அணியின் தலைவர் சஞ்ஜீவ் சுரிவாலா "இந்த லோகோ பயமில்லா தைரியமான மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களை நாங்கள் தொடர்ந்து மகிழ்விப்போம் என்ற ரீதியிலும் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புவோம். ஆர்சிபிக்கு அது தேவையானதாக இருக்கிறது. இந்தாண்டு நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்" என்றார் அவர்.

இந்த பழைய லோகோவில் இருந்து சற்றே மாறுபட்டுள்ளது. பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். ஆர்சிபி அணிக்கு இதுவரை மூன்று முறை லோகோவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com