ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந் தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 284 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தனியாக போராடினார். இதன் பலனாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 24 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். 144 ரன்களை எடுத்து ஸ்மித் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டு களையும் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 10 ரன்னில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் கைகோர்த்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.
ஜோ ரூட் 57 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ டென்லி 18 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 5 ரன்னிலும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தனர்.. இதற்கு மத்தியில் நிலைத்து நின்று ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
2-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 125 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.