சத்தமின்றி சாதனை படைத்த ரோகித் - சொன்னதை செய்தார்..!

சத்தமின்றி சாதனை படைத்த ரோகித் - சொன்னதை செய்தார்..!
சத்தமின்றி சாதனை படைத்த ரோகித் - சொன்னதை செய்தார்..!
Published on

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறுகின்றன. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ட்ரெண்ட் பிரிஜிட் மைதானத்தில் நடைபெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 268 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பட்லர் 53 (51), ஸ்டோக்ஸ் 50 (103), ராய் 38 (35) மற்றும் ஜானி 38 (35) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன் சேர்க்கவில்லை. இந்திய அணி தரப்பில் பந்துவீசிய குல்தீப் யாதவ் அபாரமான பந்துவீசி 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து விளையாடிய இந்திய அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா 137 (114) ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். கேட்பன் கோலி 75 (82), ஷிகர் தவான் 40 (27) ரன்கள் சேர்த்தனர்.

இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ரோகித் ஷர்மா சத்தமே இல்லாமல் ஒரு சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை தான் அது. நேற்றைய போட்டியில் ரோகித் 137* ரன்கள் எடுத்தார். இதற்கு முன்பாக 2011ம் ஆண்டு கர்டிப்பில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் விராட் கோலி அடித்த 107 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது. அந்த மைல்கல்லை தற்போது ரோகித் முறியடித்துள்ளார்.

3வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற பின் பேட்டியளித்திருந்த ரோகித், “நான் எனக்காக இந்த போட்டியில் (3வது டி20) விளையாடவில்லை. இந்திய அணிக்காக விளையாடினேன். இந்த போட்டியில் வென்றால் தான் அணிக்கு கோப்பை கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டும் விளையாடினேன்” என்று கூறியிருந்தார். அதன்பின்னர் நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன்னர் பேசியிருந்த ரோகித், “இந்தத் தொடரை நான் தொடக்கம் முதலே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி விளையாடப்போகிறேன். ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு நான் பெரிதளவில் கிரிக்கெட் விளையாடவில்லை. எனவே இந்த ஒருநாள் தொடரில் தொடக்கம் முதலே கவனத்துடன் விளையாடி நான் மீண்டும் பேட்டிங்கில் சிறந்த நிலையை அடைய நினைக்கின்றேன். அதை முடிந்த வரை சிக்கிரம் செய்ய முயற்சிப்பேன். இதைத்தான் நான் வரும் தொடரில் செய்யப்போகிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

ரோகித் ஷர்மா கூறியது போலவே முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசி தனது பாஃர்மை வெளிப்படுத்தியுள்ளார். 

ஒரு அணி சிறந்தது என்பதற்கு இதுபோன்ற போட்டிகள் எடுத்துக்காட்டாகும். அதாவது சிறந்த அணி என்றால் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் சிரமம் இல்லாமல், அசால்டாக அடிக்க வேண்டும். அதேபோல், சுமாரான ரன் அடித்தாலும் எதிரணியை பந்துவீச்சால் சுருட்ட வேண்டும். அந்த வகையில் 269 ரன்கள் என்ற இலக்கை 41வது ஓவரிலேயே அடித்து இந்திய அணி சிறந்தது என்பதை நிரூபித்துள்ளது. இதற்கு ரோகித் ஷர்மாவின் சதம் தான் முக்கியமான காரணம். இதுவரை இங்கிலாந்தில் ரோகித் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 5 அரை சதம் மற்றும் 2 சதம் அடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com