பொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்!

பொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்!
பொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்!
Published on

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறுகின்றன. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

நேற்று நடைபெற்ற 2வது போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ரூட் 113 (116), மார்கன் 53 (51), டேவிட் வில்லி 50 (31) ரன்கள் குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் ரெய்னா 46 (63), விராட் கோலி 45 (56), தோனி 37 (59), ஷிகர் தவான் 36 (30) ரன்கள் எடுத்தனர். கடந்த ஒருநாள் போட்டி மற்றும் 3வது டி20 போட்டியில் சதம் அடித்த ரோகித் ஷர்மா 15 (26) ரன்களில் அவுட் ஆனார். அவர் தான் முதல் விக்கெட்டும் கூட. அவர் விக்கெட்டிற்குப் பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் அப்படியே சரியத் தொடங்கியது.

இந்த ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்னர் பேட்டியளித்திருந்த ரோகித் ஷர்மா, “இந்தத் தொடரை நான் தொடக்கம் முதலே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி விளையாடப்போகிறேன். ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு நான் பெரிதளவில் கிரிக்கெட் விளையாடவில்லை. எனவே இந்த ஒருநாள் தொடரில் தொடக்கம் முதலே கவனத்துடன் விளையாடி நான் மீண்டும் பேட்டிங்கில் சிறந்த நிலையை அடைய நினைக்கின்றேன். அதை முடிந்த வரை சிக்கிரம் செய்ய முயற்சிப்பேன். இதைத்தான் நான் வரும் தொடரில் செய்யப்போகிறேன்” என்று தெரிவித்திருந்தார். அவர் கூறிய படியே முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அதுவே வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தது. 

இந்த அளவிற்கு திட்டமிட்டு விளையாடும் ரோகித் நேற்று சற்று பொறுமையை இழந்துவிட்டாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் நேற்று ரோகித் 25 பந்துகளில் 15 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டத்தை பொறுமையுடன் வெளிப்படுத்தி வந்தார். அவர் ஆட்டம் ஆரம்பத்தில் இதுபோன்று தான் பொறுமையாக இருக்கும், பின்னர் நிலைத்து ஆட ஆரம்பித்துவிட்டால் சில பந்துகளிலேயே ரன்களை உயர்த்திவிடுவார். தொடக்கத்தில் கடினமான பந்துகளில் ரிஸ்க் எடுக்காமல் ஆடுவதும் ரோகித் ஸ்டைல் தான்.

இப்படி இருக்க நேற்று மார்க் வுட் வீசிய பந்தை சற்றும் யோசிக்காமல், துணிச்சலுடன் ரிஸ்க் எடுத்து அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து அவரது பேட்டில் சிக்காமல் ஸ்டம்ப் மீது மோதி போல்ட் ஆனது. இதனால் அவர் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் நிகழ்வு கிரிக்கெட்டில் ஒரு சாதாரணமானது என்றாலும், நேற்று 25 பந்துகளை கடந்த பிறகும் ரோகித் இப்படி அடித்தது அனைவரையும் சற்று வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. அதன்பின்னர் அவர் கொடுத்த ரியாக்‌ஷன் ஒரு நிமிடம் அவசரப்பட்டு விட்டோம் என்று வருந்தியதையும் வெளிப்படுத்தியது. அந்த விக்கெட் அரங்கத்தில் இருந்த ரசிகர்களையும் அதிர்ந்து போகச்செய்தது. ஏனெனில் 323 என்ற இலக்கை எதிர்த்து விளையாடும் போது, ரோகித் அவுட் ஆனது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதுதான். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com