இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரா் ரோகித் சா்மா வெள்ளிக்கிழமை பிசிசிஐ நடத்தும் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்கவுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரைக் கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று நடைபெறும் உடல் தகுதி சோதனையில் ரோகித் சர்மா தகுதி பெறும் பட்சத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அவரை அனுப்பி வைப்பது குறித்து பிசிசிஐ முடிவு செய்யும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்துவிட்டு மீண்டும் களமிறங்கினாா் ரோகித் சா்மா.
முழுமையாக குணமடையாத நிலையிலேயே அவா் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதாக கூறப்பட்டது. அவா் தலைமை வகித்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. எனினும், காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் ரோகித் சா்மா சோ்க்கப்படவில்லை. இப்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோகித் சா்மாவின் உடல் தகுதி எவ்வாறு உள்ளது என்பது தொடா்பாக வெள்ளிக்கிழமை பரிசோதனை நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அவா் ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியும்.