நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் விக்கெட்டை எப்படி இந்தியா வீழ்த்தியது என்ற சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 போட்டிகளையும் வெற்றிபெற்ற இந்திய அணி, ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் உலகத்தரம் வாய்ந்த நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளது.
கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் போன்ற மூத்த வீரர்கள் இல்லாததால் இளம்வீரர்களோடு களமிறங்கிய நியூசிலாந்து அணியை விக்கெட் கீப்பர் டாம் லாதம் வழிநடத்தினார். முதல் ஒருநாள் போட்டியில் அற்புதமாக பேட்டிங் செய்த ஆல்ரவுண்டர் ப்ரேஸ்வெல், 350 ரன்களை விரட்டிய போதும் இந்தியாவின் வெற்றிக்கு இறுதிவரை தொல்லையாக அமைந்தார். முதல் போட்டியை 12 ரன்களில் போராடி வெற்றிபெற்றாலும், இரண்டாவது போட்டியில் முகமது ஷமியின் அற்புதமான பந்துவீச்சால் நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது இந்திய அணி. மூன்றாவது போட்டிக்கு முன்னதாகவே தொடரை வென்ற இந்தியா, மூன்றாவது போட்டியையும் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
0 ரன்னிற்கு விக்கெட்டை இழந்தாலும் மீண்டு வந்த நியூசிலாந்து!
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 386 என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஓபனிங் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன், போல்டாகி 0 ரன்னில் வெளியேற, முந்தைய போட்டிபோல் தடுமாறியது நியூசிலாந்து. பின்னர் நிதானித்த டெவான் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோலஸ் இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 106 ரன்களை சேர்த்தது. அதற்கு பின்னர் வந்த டேரில் மிட்சலும் கான்வேவிற்கு சப்போர்ட்டிங் ரோல் விளையாட, அதிரடியாக விளையாடிய கான்வே சதமடித்து அசத்தினார்.
நியூசிலாந்தை சர்ப்ரைஸ் செய்த ஷர்துல் தாகூர்!
184 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டுமே இழந்து, நன்றாக இலக்கை விரட்டிகொண்டிருந்த நியூசிலாந்து அணியை இரண்டே பந்துகளில் தலைகீழாக திருப்பி போட்டார் ஷர்துல் தாகூர். 26ஆவது ஓவரின் முதல் பந்தில் டேரில் மிட்சலை வெளியேற்றிய தாகூர், அடுத்த பந்திலேயே கேப்டன் டாம் லாதமை டக் அவுட்டாக்கி வெளியேற்றி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார். நக்கிள் டெலிவரி எனப்படும் வேகம் குறைவான பந்தை, லோ யார்க்காராக அவர் வீச, அதை முன்னதாகவே விளையாடி முடித்திருந்தார் டாம் லாதம். மிஸ் டைமிங்கில் அவரடித்த பந்து நேராக மிட் ஆனில் நின்றிருந்த ஹர்திக் பாண்டியா கைகளுக்கு சென்று விக்கெட்டை பறிகொடுத்தது! கேப்டன் டாம் லாதமின் விக்கெட்டிற்கு பிறகு நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிச்சென்றது. போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருதை ஷர்துல் தாகூர் தட்டிச்சென்றார்.
அது எனக்கே சர்ப்ரைஸாக இருந்தது..கோலி, ஹர்திக், ஷர்துல் சேர்ந்துதான் அதை நிகழ்த்தினர்!
டாம் லாதம் விக்கெட் குறித்து பேசியிருக்கும் ரோகித் சர்மா, டாம் லாதம் விக்கெட்டை கைப்பற்றியது எனக்கே சர்ப்ரைஸ்ஸாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் ரோகித், “ டாம் லாதமை வீழ்த்தியது என்னுடைய பிளான் இல்லை. அது கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் திட்டமாகத்தான் இருந்தது. டாம் லாதமிற்கு முதல் பந்தே ஸ்லோ நக்கிள் டெலிவரி வீசுவது தான் பிளானாக இருந்துள்ளது. அது சரியாக ஒர்க் அவுட்டானது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஷர்துல் தாகூர் குறித்து அவர் பேசுகையில், “ஷர்துல் ஒரு ஸ்மார்ட்டான பவுலர். அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை அறிந்து பந்துவீசக்கூடியவர். அவரிடம் சில தனித்துவமான திறமைகள் உள்ளன. இந்த போட்டி மட்டுமல்ல, அவர் பல உள்நாட்டு போட்டிகளில் இதை செய்துள்ளார். டாம் லாதமிற்கு எதிராக வீசிய நக்கிள் டெலிவரி, நல்ல திட்டமாக இருந்தது” என்று கூறினார்.