’’நான்காவது வரிசையில் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடுகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கொடுத்த பார்டனர்ஷிப் முக்கியமானது’’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
உலகக் கோப்பை தொடரில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி நடந்தபோது, விக்கெட் கீப்பர் தோனி, பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியா இதுபற்றி விவாதங்களையும் நடத்தின. இதற்கிடையே, தோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வலியுறுத்தியது.
இந்நிலையில், தோனிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி, தோனி தனது கையுறையில் உள்ள அந்த முத்திரையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. அதனால் இன்றைய போட்டியில் தோனி, வேறு கையுறையை பயன்படுத்தி விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் இதுபற்றி கேட்டபோது, ’’இந்த சர்ச்சை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தோனி கையுறையில் உள்ள முத்திரையை நீக்குவாரா, இல்லையா என்பது நாளை (இன்று) நடக்கும் போட்டியின்போது தெரிந்துவிடும்’’ என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ‘’தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சதம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனென்றால் அந்த பிட்ச் எளிதாக இருக்கவில்லை. வழக்கமான எனது ஆட்டத்தையும் அங்கு ஆடமுடியவில்லை. தொடர்ந்து அதிகமான போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை. சாதனைகளை பற்றி கவலைப்படவில்லை.
நான்காவது வரிசையில் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடுகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கொடுத்த பார்டனர்ஷிப் முக்கியமானது. அந்தப் போட்டியில் அவர் எடுத்த 26 ரன் என்பது 50 ரன்னுக்கு சமம். இந்த தொடரில் அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.