“யானைக்கு என்ன நடந்தது எனக் கேட்டு இதயமே வெடித்துவிட்டது” - ரோகித் சர்மா வேதனை

“யானைக்கு என்ன நடந்தது எனக் கேட்டு இதயமே வெடித்துவிட்டது” - ரோகித் சர்மா வேதனை
“யானைக்கு என்ன நடந்தது எனக் கேட்டு இதயமே வெடித்துவிட்டது” - ரோகித் சர்மா வேதனை
Published on
கேரளாவில் யானைக்கு என்ன நடந்தது எனக் கேட்டு இதயமே வெடித்துவிட்டது என இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கூறியுள்ளார். 
 
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்த கர்ப்பிணி யானை ஒன்று பசிக்காக உணவு தேடி ஊருக்குள் புகுந்தது. அப்போது அப்பகுதி மக்கள் யானைக்கு உணவளித்தனர். இதில் சிலர் யானைக்குக் கொடுத்த அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்துக் கொடுத்ததாகவும், அதனால்தான் யானை உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில்  அங்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள  ‘இந்தியன் பிஸ்னஸ் டைம்’இந்திய வனத்துறை அதிகாரி ஏபி க்யூமை பேட்டி எடுத்து செய்தியாக வெளியிட்டுள்ளது.
 
இந்தச் சம்பவம் குறித்து அவர்,“யானைக்கு யாரும் வெடிமருந்து நிரம்பிய அன்னாசிப் பழங்களைக் கொடுக்கவில்லை என நினைக்கிறேன். காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காக்க வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழங்களைப் பசிக்காக யானை உண்டதாகத் தெரிகிறது. அப்பகுதியில் உள்ள மக்கள் விலங்குகளிடம் இருந்து தங்களையும், தங்களது பயிர்களையும் பாதுகாக்க இது போன்ற விஷயங்களைச் செய்கின்றனர்” என்றார்.
 
மேலும்  அவர் “விவசாயிகள் தங்களது பயிர்களைக் காட்டுப் பன்றிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வலைகளை வைத்துள்ளனர். இந்த வலையில் காட்டுப்பன்றிகள் மட்டுமல்லாது பிற விலங்குகளும் சிக்கிவிடுகின்றன. இறந்த கர்ப்பிணிப் பெண் யானை பாலக்காட்டில் உள்ள சைலண்ட் வேலி தேசிய பூங்காவிலிருந்து வந்துள்ளது. யானைக்கு தற்போது 15 வயது. உண்மையில், யானை இறந்தது அனைவருக்கும் பெரும் வலியைக் கொடுத்து விட்டது” என்றார்.
 
 
 
யானையைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் டேவிட் கூறும்போது “நான்  250-க்கும் மேற்பட்ட யானைகளுக்குப் பிரேதப் பரிசோதனை செய்துள்ளேன். ஆனால் முதல் முறையாக ஒரு இறந்த கர்ப்பிணி யானையின் குட்டியை கைகளில் எடுத்த போது நான் நிலைகுலைந்து விட்டேன். முதலில் யாரும் யானை கர்ப்பிணியாக இருப்பதை அறியவில்லை. யானையின் இதயத்திலிருந்து அம்னோடிக் திரவம் வந்த போதுதான் யானை கர்ப்பிணியாக இருக்கிறது என்பதை அறிந்தோம்” என்றார்.
 
 
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து திரைத்துறை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நாம் காட்டுமிராண்டிகள். நாம் பாடம் கற்கவில்லையா? கேரளாவில் என்ன நடந்தது எனக் கேட்டு இதயமே வெடித்துவிட்டது. எந்த விலங்கையும் கொடுமைப்படுத்தும் தகுதி நமக்கு கிடையாது” எனக் கூறியுள்ளார்.
 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com