ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 8 ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இதனையடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரோகித் சர்மா முதல்முதலாக 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பலாக விளையாடினார் ரோகித். இதனையடுத்து அதே சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் 161 ரன்களை எடுத்து அசத்தினார். பின்பு அகமதாபாத்தில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 66 ரன்களும், 2-ஆவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 25 ரன்களும் எடுத்தார்.
இதனையடுத்து 6 இடங்கள் முன்னேறி 742 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 8-ஆம் இடத்தை பிடித்துள்ளார். அதே பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கேப்டன் விராட் கோலி 5-ஆவது இடத்திலும், புஜாரா 10-ஆவது இடத்திலும் இருக்கின்றனர். நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (919), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (891), மார்னஸ் லபுஷானே (878) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
அதேபோல் பவுலர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் (823 புள்ளிகள்) 4 இடங்கள் ஏற்றம் கண்டு 3-ஆவது இடம் பிடித்துள்ளார்.