வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஒரு சோதனையான தொடராகவே அமைந்துவிட்டது.
டெஸ்ட் தொடரை மிகவும் நம்பிக்கையாக முடித்த இந்திய அணி ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் வெற்றியும் அதிக உற்சாகத்தை கொடுத்தது. ஆனால், இரண்டாவது போட்டியில் டிரா, மூன்றாவது போட்டியில் தோல்வி என நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது இந்திய அணி. முதல் மூன்று போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் விஸ்வரூபம் எடுத்தது. ஆனால், கடைசி இரண்டு போட்டியில் அதற்கு நேர்மாறாக அந்த அணி 200 ரன்களை கூட தாண்ட முடியவில்லை. கடைசி போட்டியில் வெறும் 104 ரன் எடுத்து இந்தியாவுக்கு எதிரான மோசமான ரெக்கார்டை பதிவு செய்தது. இந்திய அணி 3-1 என்ற கணக்கில் அசத்தலாக தொடரை வென்றுள்ளது.
மிரட்டியவர்கள் - சொதப்பியவர்கள்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் மூன்று போட்டிகளில் சதம் விளாசி, தான் ஒரு ரன் மிஷின் என்பதை மீண்டும் நிரூபித்தார். 4வது போட்டியில் மட்டும்தான் இவர் சரியாக விளையாடவில்லை. கடைசி போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 33 ரன் எடுத்தார். இந்தத் தொடரில் விராட் 453 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
விராட் கோலிக்கு அடுத்து மிரட்டியவர் ரோகித் சர்மா. முதல் போட்டியிலும், 4வது போட்டியில் 150 ரன்களுக்கு மேல் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடுவது பின்னர் வெளுத்து வாங்குவது என்ற பாணியை இந்தத் தொடர் முழுவதும் அவர் வழக்கம் போல் பின்பற்றினார். கடைசி போட்டியிலும் அரைசதம் அடித்தார். 389 ரன் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மிடில் ஆடர் பிரச்னை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில் இந்தத் தொடரில் மற்றவர்கள் சொதப்பினாலும் அம்பத்தி ராயுடு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார். நான்கவது போட்டியில் அவர் அடித்த சதம் சிறப்பானதாகும். இரண்டாவது போட்டியில் 73 ரன் எடுத்திருந்தார். அடுத்தடுத்த போட்டிகளுக்கான தனது இருப்பை இந்தத் தொடர் மூலம் அவர் தக்க வைத்துக் கொண்டார் என்றே தோன்றுகிறது.
பந்துவீச்சை பொருத்தவரை முதல் மூன்று போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்தத் தொடரில் பும்ராவும், ஜடேஜாவும் சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு உதவினர். அதேபோல், அறிமுக வீரர் அஹமது நம்பிக்கை அளிக்கும் வகையில் பந்துவீசினார். புவனேஸ்வர் குமார் இந்தத் தொடரில் ஏமாற்றமே அளித்தார்.
இந்தத் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பியவர் தோனிதான். இந்தத் தொடரில் அவர் மூன்று இன்னிங்சில் விளையாடி அடித்த ரன்கள் வெறும் 50. முக்கியமாக மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போது தோனியின் ரசிகர்களுக்கே அவர் மீது வெறுப்பு வரும் அளவிற்கு ஆகிவிட்டது. இந்த ஆண்டிலே அவர் ஒரு அரைசதம், கூட அடிக்கவில்லை. தோனி 10 ஆயிரம் ரன்களை எடுக்க இன்னும் 1 ரன் தேவை. இந்தப் போட்டிக்கு அடுத்த அவர் ஜனவரியில் தான் அடுத்த ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.
தோனிக்கு அடுத்து இந்தத் தொடரில் சொதப்பியவர் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். சில போட்டிகளில் நல்ல தொடக்கம் அளித்தாலும், ஒன்றை கூட அவரால் அரைசதமாக மாற்ற முடியவில்லை. இவர் அடித்த அதிகபட்ச ரன்னே 38தான். ரிஷப் பண்ட்டும் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. பீல்டிங்கில் குல்தீப், சாஹல் நன்றாக சொதப்பினர். கேதர், ஜடேஜா நன்றாக பீல்டிங் செய்தார்கள்.
ஒருநாள் தொடரில் நிகழ்ந்த சிறப்புகள்:-