இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து அவர் மும்பை திரும்புகிறார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா. தொடக்க ஆட்டக்காரரான இவர், ரித்திகா என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கிரிக்கெட் போட்டி நடக்கும் இடங்களுக்கு எப்போதும் மனைவியை அழைத்து வருவார் ரோகித். இவர்களின் ரொமான்ஸ் இந்திய கிரிக்கெட் டீமில் பிரபலமான ஒன்று. இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் தொட ரில் ரோகித் சர்மா பங்கேற்றுள்ளார்.
ரித்திகா, இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தைப் பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் ஆஸ்திரேலியாவில் உள்ள ரோகித் சர்மாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. மகிழ்ச்ச்சி அடைந்த அவர் சக வீரர்களிடம் இதை பகிர்ந்து கொண்டார். அவர்கள் ரோகித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதையடுத்து தனது ஆசை மகளைக் காண அவர் உடனடியாக மும்பை திரும் புகிறார்.
இதனால் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா களமிறங்குவார் என்று தெரிகிறது.