ரோகித், டிம் டேவிட், இஷான் அதிரடி ஆட்டம்! குஜராத்திற்கு எதிராக 177 ரன்களை குவித்தது மும்பை

ரோகித், டிம் டேவிட், இஷான் அதிரடி ஆட்டம்! குஜராத்திற்கு எதிராக 177 ரன்களை குவித்தது மும்பை
ரோகித், டிம் டேவிட், இஷான் அதிரடி ஆட்டம்! குஜராத்திற்கு எதிராக 177 ரன்களை குவித்தது மும்பை
Published on

ரோகித் ஷர்மா, டிம் டேவிட், இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 177 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரின் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்று வரும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணியின் ஓப்பனர்களாக இஷான் கிஷனும் ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர்.

முதல் பந்திலேயே முகமது ஷமி “வைடு” பாலாக வீச, பந்தை தொடாமலேயே ரன் கணக்கை துவங்கியது மும்பை அணி. அல்சாரி ஜோசப் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி அதிரடி காட்டினார் ரோகித். அடுத்து முகமது ஷமி வீசிய ஓவரிலும் ரோகித் சிக்ஸர் விளாச, ஜோசவ் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாச ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரத் துவங்கியது.

அதுவரை அமைதியாக விளையாடிய இஷான் கிஷன் தன் பங்குக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, 5 ஓவர்களில் 50 ரன்களை எளிதாக கடந்தது மும்பை அணி. பெர்குசன் வீசிய ஓவரை இருவரும் இணைந்து பதம்பார்க்க, இந்த கூட்டணியை பிரிப்பதற்குள் குஜராத் பவுலர்கள் திணறிப் போயினர். இறுதியாக ரஷீத் கான் வீசிய ஓவரில் ரோகித் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேற மும்பையின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டதாக நினைத்தனர் குஜராத் பவுலர்கள்.

அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆட நினைத்து அவுட்டாக, மறுபக்கம் இஷான் அதிரடியாக ஆடி ஸ்கோரை தாங்கி பிடித்தார். ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. அல்சாரி வீசிய பந்தில் சிக்கி இஷான் வெளியேற மும்பையின் வேகம் முடங்கிப்போனது. அடுத்து வந்த திலக் வர்மா, பொல்லார்ட் தடுப்பாட்ட யுக்தியை கையில் எடுத்ததால் ரன் ரேட் சரியத் துவங்கியது.

14 பந்துகளை சந்தித்து வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரஷீத் வீசிய பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார் பொல்லார்ட். அடுத்து வந்த டிம் டேவிட் திலக் வர்மாவுடன் இணைந்து பொறுப்பாக விளையாடினார். ஏதுவான பந்துகளை சரியாக எல்லைக்கோட்டுக்கு விரட்டிக் கொண்டிருந்தார் டிம் டேவிட். அப்போது பெர்குசன் வீசிய நோ பாலில் திலக் வர்மா ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த டேனியல் சாம்ஸ் டக் அவுட் ஆகி நடையைக் கட்ட, கடைசி ஓவரில் டிம் டேவிட் இரு சிக்ஸர்களை விளாசி அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது மும்பை அணி. ஓப்பனர்களான ரோகித், இஷான் அமைத்துக் கொடுத்த சிறப்பான ஆட்டத்திற்கு அந்த அணி 200 ரன்களை தாண்டி ரன் சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பியதால் 180 ரன்களுக்குள் அதன் ஸ்கோர் அடங்கி விட்டது. தற்போது குஜராத் அணி 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com