பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனது 100வது கோப்பையை வென்று ரோஜர் பெடரர் சாதனை புரிந்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் கிரீசின் சிட்சிபாசை வீழ்த்தியதன் மூலம், ரோஜர் பெடரர் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். 20 வயதேயான சிட்சிபாஸ் ஆஸ்திரேலியா ஓபன் தொடரின் போது நான்காவது சுற்றில் ரோஜர் பெடரரை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் பழிதீர்த்துக் கொள்வாரா என்று ரோஜர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
சர்வதேச அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் சிட்சிபாசை வீழ்த்தி ரோஜர் பெடரர் அசத்தினார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் 100 கோப்பைகளை வென்ற இரண்டாவது டென்னிஸ் வீரர் என்ற பெருமையை பெடரர் பெற்றுள்ளார். 109 கோப்பை வெற்றிகளுடன் அமெரிக்காவின் ஜிம்மி கான்னர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.