இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி ஐதராபத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்று பெற்று சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி ஐதராபாத்தில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்கியுள்ளது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பண்டுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் களமிறங்க உள்ளார். ஆஸ்திரேலியா அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் சீன் அபோட்டுக்கு பதிலாக ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்க உள்ளார்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன. இந்திய அணி இன்று வெற்றி பெற்றால், 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணி என்ற சாதனையை நிகழ்த்தும். இந்திய அணி இந்த வருடத்தில் இதுவரை 20 வெற்றிகளைப் பெற்றுள்ளது. சென்ற ஆண்டு பாகிஸ்தான் அணி 20 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. அதனை முறியடிக்க இந்த அணிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக க்ரீன் மற்றும் பின்ச் களமிறங்கினர். க்ரீன் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். பின்ச் விக்கெட்டை அக்ஸர் பட்டேல் வீழ்த்திய போதும் இரண்டு ஓவர்களில் 27 ரன்களை வாரி வழங்கினார். 4 ஓவர்கள் முடிவிலேயே ஆஸ்திரேலிய அணி 56 ரன்கள் குவித்தது. க்ரீன் 19 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 7 பவுண்டரி அடங்கும். 5வது ஓவரின் கடைசி பந்தில் 52 ரன்னில் ஆட்டமிழந்தார் க்ரீன். ஆஸ்திரேலிய அணி 5 ஓவர் முடிவில் 62 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்துள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவன்:
இந்திய அணி: கேஎல் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.