டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகம் - கோலி, ரிஷப் பந்த் இருவருக்கும் ஒரே மாதிரியான ஒற்றுமை

டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகம் - கோலி, ரிஷப் பந்த் இருவருக்கும் ஒரே மாதிரியான ஒற்றுமை
டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகம் - கோலி, ரிஷப் பந்த் இருவருக்கும் ஒரே மாதிரியான ஒற்றுமை
Published on

நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தநிலையில், கேப்டனாக அறிமுகப் போட்டியில் முன்னாள் கேப்டனான விராத் கோலிக்கும், ரிஷப் பந்திற்கும் மூன்று ஒரே மாதிரியான ஒற்றுமைகள் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது தென்னாப்பிரிக்கா அணி. நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கிய இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலாவதாக பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் ஐபிஎல் போட்டியில் சொதப்பினாலும், நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து அணியின் ரன் ரேட்டுக்கு உதவி புரிந்தார்.

அதேபோல், ஹர்திக் பாண்ட்யா 12 பந்துகளில் 31 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 16 பந்துகளில் 29 ரன்களும் எடுத்தனர். ருதுராஜ் 23 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களும் எடுத்திருந்தனர். தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் இறங்கியதால் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா துவக்க ஆட்டக்காரர்களான டி காக் (22), கேப்டன் பவுமா (10) சொதப்பினாலும், பிரிட்டோரியஸ் (29), துஷன் (75), மில்லர் (64) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி இலக்கை எளிதாக எட்டி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா அணி. இதையடுத்து இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது.

மூத்த வீரர்களான கோலி, ரோகித் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டநிலையில், கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல். ராகுல் கடைசி நேரத்தில் விலக, ரிஷப் பந்த் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகமானார். முதல் போட்டியிலேயே தோல்வியடைந்ததால் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் கேப்டனாக அறிமுகப் போட்டியில் முன்னாள் கேப்டனான விராத் கோலிக்கும், ரிஷப் பந்திற்கும் மூன்று ஒரே மாதிரியான ஒற்றுமைகள் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கேப்டனான விராத் கோலி, கடந்த 2017-ம் ஆண்டு கான்பூரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கேப்டனாக அறிமுகமானார். அந்த ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. அதுவும் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. நேற்றையப் போட்டியிலும் இந்திய அணிக்கு கேப்டனாக ரிஷப் பந்த் அறிமுகமானார். இந்தப் போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்தது. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் முன்னாள் கேப்டன் விராத் கோலி 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதேபோல் நேற்றைய ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட்டானர். மேலும் ஒரு மோசமான சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். 12 தடவை முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தநிலையில், அதில் வெற்றிபெற்றும் உள்ளது. ஆனால் முதன்முறையாக இந்திய அணி இமாலய இலக்கை படைத்தும் வெற்றிவாகை சூடாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com