ரிஷப் பன்ட்டால் கொடுக்க முடிந்ததை நிச்சயமாக சாஹாவால் முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சரண்தீப் சிங் "ரிஷப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருக்கு முன்பு உடற்தகுதியில் சில பிரச்னைகள் இருந்தது. ஆனால் அதனை சரி செய்ய கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக அவர் இப்போது நல்ல உடற் தகுதியுடன் இருக்கிறார். 21 வயதான ரிஷப் 30 வயதான வீரரை போல அவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார்" என்றார்.
மேலும் "அதேபோல ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங்கிலும் அவ்வளவு முதிர்ச்சி தெரிகிறது. இவையெல்லாம் அனுபவங்களால் வரக்கூடியது. கடந்த 6 மாதத்தில் ரிஷப் தன்னுடைய ஆட்டத்தை அவ்வளவு மெருகேற்றியிருக்கிறார். அதுவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டங்களில் அவ்வளவு நேர்த்தியை வெளிப்படுத்தியிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு அவர் விளையாடுவார். சாஹாவால் அதனை தர முடியாது. இப்போது ரிஷப் பன்ட் மட்டுமே இந்தியாவின் விக்கெட் கீப்பர் சாய்ஸ்" என்றார் சரண்தீப் சிங்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். அவருக்கு பதிலாக ரிஷப் களமிறங்கி ஜொலித்தார். அவர் காயத்திலிருந்து மீண்டதும் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்வார், ரிஷப் பன்ட் வெளியே அமர்வார். ஏனென்றால் விக்கெட் கீப்பிங் பணியையும் பேட்டிங்கையும் வெகு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்" என்றார் சரண்தீப் சிங்.