தோனியுடன் பிரச்னையா, வெற்றி தலைக்கேறியதா ? ரெய்னா குறித்து சீனிவாசன் !

தோனியுடன் பிரச்னையா, வெற்றி தலைக்கேறியதா ? ரெய்னா குறித்து சீனிவாசன் !
தோனியுடன் பிரச்னையா, வெற்றி தலைக்கேறியதா ? ரெய்னா குறித்து சீனிவாசன் !
Published on

சிஎஸ்கே நிர்வாகத்தினருடனும், தோனியுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் விளையாடாமல் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா சொந்தக் காரணங்களுக்காக இந்தியா திரும்பியதாக இரு நாள்களுக்கு முன்பு சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது. மேலும் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் ரெய்னா விளையாடமாட்டார் என்றும் தெரிவித்தது. இது கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பதான்கோட்டில் மர்ம நபர்களால் தன் அத்தையின் குடும்பம் தாக்கப்பட்டதாலும் மாமா இறந்ததாலும் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்பட்டது.

ஆனால் இதற்காகக்தான் ரெய்னா இந்தியா திரும்பியதாக சிஎஸ்கேவும் பிசிசிஐயும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் "தி அவுட்லுக்" பத்திரிகை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ரெய்னாவுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட மனக்கசப்பே அவர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது. சுரேஷ் ரெய்னா ஆகஸ்ட் 21 ஆம் தேதி துபாயில் இறங்கியதில் இருந்து நிர்வாகத்துடன் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

துபாயில் ரெய்னாவுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறை அவருக்கு ஏற்பட்ட முதல் அதிருப்தி என கூறப்படுகிறது. தோனிக்கு ஒதுக்கப்பட்ட அறை போல தனக்கும் வேண்டும் என ரெய்னா கேட்டதாகவும் தெரிகிறது. மேலும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளும் ரெய்னாவுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பால்கனி இல்லை என்பதே ரெய்னாவின் பிரதான பிரச்னையாக இருந்துள்ளது. தோனியால் ரெய்னாவை சமாதானப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அப்போதுதான் சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது ரெய்னாவுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் உடனடியாக இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன் "அந்தக் காலத்து நடிகைகள் போல சில கிரிக்கெட் வீரர்கள் நடந்துக் கொள்கிறார்கள். சிஎஸ்கே அணி என்பது ஒரு குடும்பம் போல. மூத்த வீரர்கள் புதிய வீரர்களுடன் இணைந்து இருக்க பழகிக்கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "என்னைப் பொறுத்தவரை நீங்கள் எங்களுடன் மகிழ்ச்சியாக இல்லையா ? திரும்பி சென்றுவிடுங்கள். நான் யாரையும் வற்புறுத்தி இருக்க சொல்லமாட்டேன். சில நேரங்களில் வெற்றி உங்கள் தலைக்கேறிவிடும். இதுதொடர்பாக தோனியிடம் நான் பேசினேன். இதுபோல இன்னும் சிலர் அணியில் இருந்து வெளியேறினாலும் கவலையில்லை என சொன்னார். மேலும் சில வீரர்களுடன் அவர் ஜூம் கால் மூலம் பேசினார். அவர்களை பாதுகாப்பாக இருக்கும்படி கூறியுள்ளார்" என்றார் சீனிவாசன்.

தொடர்ந்து பேசிய அவர் "எங்கள் அணியில் திடமான கேப்டன் இருக்கிறார்.தோனிக்கு இதுபோன்ற விஷங்கள் எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. அவர் எல்லோருக்கும் நம்பிக்கை கொடுத்து வருகிறார். மேலும் சுரேஷ் ரெய்னா விலகியதால் இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர் மிகவும் திறமையானவர். யார் அறிவார் அவர் பிரமாதமான வீரராக இந்த ஐபிஎல் தொடரில் ஜொலிக்கலாம். ஆனால் ரெய்னா அணிக்கு திரும்புவதை விரும்புவார்" என்றார்.

நேரடியாக ரெய்னாவை பற்றிப் பேசிய சீனிவாசன் "இன்னும் ஐபிஎல் தொடர் தொடங்கவில்லை. இந்தாண்டு விளையாடவில்லை என்றால் அவர் நிச்சயம் தனக்கான தொகையை இழப்பார் (ரூ.11 கோடி). இந்த இழப்பு அவருக்கு தெரியும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com