பல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019

பல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019
பல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019
Published on

நடந்து முடிந்த 12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முந்தைய சாதனைகள் பல முறியடிக்கப்பட்டுள்ளன. 

கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தளவில் எந்த ஒரு சாதனையும் எப்போதும் முறியடிக்கப்படலாம். இதனை மெய்ப்பிக்கும் வகையில் 12 ஆ‌வது உ‌லகக்கோப்பை தொடரில் பல்வேறு சிறந்த சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்திய வீரர் ரோகித் ஷர்மா, நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் விளாசினார். இதன் மூலம்‌ ஓர் உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் பதிவு செய்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 2015 உலகக்கோப்பையில் 4 சதங்கள் விளாசிய இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை இதன்மூலம் முறியடித்தார். இந்திய அணியின் ரன் மிஷின் ஆக கூறப்படும் விராட் கோலி, உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் அரை சதங்களை அடித்த கேப்டன் என்ற சாதனையை அரங்கேற்றி உள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையை தன் வசப்படுத்தினார். தொடர்நாயகன் விருதை வென்ற வில்லியம்சன் 578 ரன்களை விளாசி, 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் ஜெயவர்தேனே நிகழ்த்தியிருந்த சாதனையை முறியடித்தார்.

ஆஸ்திரேலிய அணி வீரர் மிச்செல் ஸ்டார்க், ஓர் உலகக்கோப்பை தொடரில்‌ அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சிறப்பை தனதாக்கினார். அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் 27 விக்கெட்டுகளை சாய்த்ததன் மூலம் இப்பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். 2007 உலகக்கோப்பையில் மெக்ராத் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியதே முந்தைய சாதனையாக இருந்தது. மேலும் ஸ்டார்க் மற்றொரு சாதனையை தன் பெயருடன் இணைத்துக்கொண்டார். இதன்மூலம் ஒரே உலகக்கோப்பை‌ தொடரில் இரு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன், ஒரே உலகக்கோப்பை தொடரில் 600 ரன்கள் சேர்த்தவர் மற்றும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற இரண்டு அரிய சாதனையை 12 ஆவது உலகக்கோப்பை தொடரில் படைத்துள்ளார். 27 ஆண்டு கால சச்சினின் சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் முறியடித்தார். அவர்தான் இக்ரம் அலி கில்.‌ இவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 86 ரன்கள் சேர்த்ததன் மூலம், 18 வயதில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் 17 சிக்சர்களை அடித்து வானவேடிக்கை காட்டினார். இதன்மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டி ஒன்றில், ஒரு அதிகபட்ச சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனை அவர் வசம் சென்றுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com