ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெளியிட்ட அறிவிப்பை சிறிது நேரத்தில் திரும்பப் பெற்றார் சிஎஸ்கே அம்பத்தி ராயுடு.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் நடப்பு சீசன் முடிந்ததும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். “இது எனது கடைசி ஐபிஎல் ஆகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 13 ஆண்டுகளாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து, விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான பயணம்” என்று அவர் பதிவிட்டு இருந்தார்.
இருப்பினும், சமூக ஊடக தளத்தில் ராயுடுவின் ஓய்வு அறிவிப்பு பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, ராயுடு அந்த ட்வீட்டை திடீரென நீக்கிவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், ஐபிஎல் 2022 சீசனின் முடிவில் அம்பதி ராயுடு ஓய்வு பெற மாட்டார் என்றும் அடுத்த ஆண்டும் அவர் சென்னை அணிக்காக விளையாடுவார் என்றும் உறுதிப்படுத்தினார்.
ஐபிஎல்லில் 187 போட்டிகளில் சதம் உட்பட 4187 ரன்கள் குவித்துள்ள ராயுடு, ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஒருவராக உள்ளார். ஐபிஎல் 2018 ஏலத்தில் ராயுடு ரூ. 2.2 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார். அந்த சீசனில் 602 ரன்களுடன் சிஎஸ்கேவின் முன்னணி ரன்களை எடுத்தவர் ஆவார். இந்தாண்டு மெகா ஏலத்தில் ராயுடுவை 6.75 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது. நடப்பு ஐபிஎல் சீசனில் ராயுடு 12 போட்டிகளில் 20 க்கு மேல் சராசரியுடன் 271 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
சென்னை அணியின் டாப் ஆர்டரில் ஒரு சிலராவது நிலைத்து நின்று ஆடும்போதிலும், மிடில் ஆர்டர் மொத்தமாக சரிந்து விழுவதற்கு ராயுடுவின் சீரற்ற ஆட்டமும் முக்கியக் காரணம். துவக்க போட்டிகளில் அருமையாக ஆடிய ராயுடு, பிளே ஆஃப் நெருக்கடி துவங்கிய ஆட்டங்களில் பொறுப்பாக விளையாட ராயுடு தவறி இருந்தார். தேவையற்ற பந்துகளில் அவர் ஆட்டமிழக்க, அடுத்து வரும் தோனி, ஜடேஜா, பிராவோ ஆகியோருக்கு அழுத்தம் அதிகரித்து அவர்களது இயல்பான ஆட்டமும் கடுமையாக பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ராயுடு 2019 ஆம் ஆண்டில் இதேபோன்ற யு-டர்ன் ஒன்றைச் செய்தார். ஏனெனில் அவர் 2019 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படாததால் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.