இங்கிலாந்து எணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் ரவீந்திர ஜடேஜா.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கியது. ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து வீரர்களின் துல்லிய பந்துவீச்சில் கில் 17 ரன்னுக்கும் புஜாரா 13 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கோலி 11 ரன்னிலும் விஹாரி 20 ரன்னிலும் வெளியேறினர். தற்காப்பு ஆட்டத்தை பின்பற்றிய இந்தியா ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் ரிஷப் பந்த் ஆட்டத்தை டாப் கியருக்கு மாற்றினார். இவர் பந்துகளை நாலாபுறமும் விளாசித்தள்ளி ரன் குவித்தார். மறுமுனையில் ஜடேஜாவும் பொறுப்பாக ஆட இந்திய ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 89 பந்துகளில் சதம் அடித்த பந்த் தொடர்ந்து விளாசினார். அவர் 111 பந்தில் 146 ரன் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். நேற்று முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 83 ரன்களுடனும், ஷமி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தன்னுடைய ஆட்டத்தை தொடர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 183 பந்துகளில் சதம் அடித்தார். மேத்யூவ் போட்ஸ் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்து தன்னுடய சதத்தை எட்டினார் ஜடேஜா. அடுத்த ஓவரிலேயே 16 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி ஆட்டமிழந்தார். பின்னர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜாவும் 104 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 375 ரன் எடுத்துள்ளது.
ஒரே இன்னிங்ஸில் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் சதம் அடித்துள்ளனர். டெஸ்டில் ஏழாவது இடத்தில் களமிறங்கி ஒரே ஆண்டில் இரண்டு சதம் அடித்த இந்தியாவின் நான்காவது வீரர் ஜடேஜா. இதற்கு முன்பு கபில்தேவ் (1986), தோனி (2009), ஹர்பஜன் சிங் (2010) ஏழாவது இடத்தில் இறங்கி சதம் விளாசினர். வெளிநாட்டு மண்ணி அவர் அடிக்கும் முதலாவது சதம் இது. மொத்தத்தில் இது மூன்றாவது செஞ்சுரி.
சதம் விளாசிய ஜடேஜாவுக்கு இந்திய வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தன்னுடைய ட்விட்டரில், ”சூப்பர் ஸ்டப் ஜட்டு.. இது உங்களுக்கு சிறப்பான இன்னிங்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டரில் தன்னுடைய பாணியில் பாராட்டியிருந்தது.