டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் கபில்தேவை பின்னுக்குத் தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மொஹாலியில் கடந்த 4 -ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து ஜடேஜாவின் சதம் மற்றும் விஹாரி, பண்ட், அஸ்வின் ஆகியோரது அரை சதங்கள் மூலம் 574 ரன்கள் சேர்த்து இரண்டாம் நாளில் டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நான்கு விக்கெட்களை இழந்திருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை, ஜடேஜா மற்றும் அஸ்வினின் சுழலில் சிக்கி முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 400 ரன்கள் பின்தங்கியிருந்த இலங்கை அணியை, ஃபாலோ ஆன் செய்ய வைத்தது இந்தியா.
இரண்டாவது இன்னிங்ஸிலும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய வீரர்களின் சுழலில் சிக்கி திக்குமுக்காடினர். குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த அந்த அணி, 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 4 விக்கெட்களை சரித்தனர்.
ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175 ரன்களும், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்களையும் எடுத்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் கபில்தேவை பின்னுக்குத் தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த டெஸ்ட்டில் அஸ்வின் இந்த சாதனையை வசப்படுத்தியுள்ளார். கபில்தேவ் 434 விக்கெட்கள் வீழ்த்தியிருந்த நிலையில் அஸ்வின் அந்த எண்ணிக்கையை 435 விக்கெட்டுகளை எடுத்து கடந்துள்ளார். இந்த பெருமை மிகு பட்டியலில் அணில் கும்ளே 619 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.