இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவுக்கு இடையே பிளவு இருப்பதாக பரவி வரும் தகவல்கள் அனைத்தும் முட்டாள்தனமானவை என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி மீது பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் எழுந்தன. இவற்றில் முக்கியமானது கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் ஷர்மா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என பெரிய புகார் வெடித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த சாஸ்திரி, “கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி வீரர்களுடன் நான் நெருக்கமாக இருந்து வருகிறேன். கோலி -ரோகித் இடையிலான பிளவு என்பது உண்மைக்கு புறம்பானது. ஏனென்றால் ஒரு அணியில் 15 வீரர்கள் இருக்கும் போது அவர்களுக்குள் கருத்து ஒற்றுமை இருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே அனைவரின் கருத்து குறித்து விவாதிக்க வேண்டும். அப்போது தான் அதிலிருந்து ஒரு புதிய யுக்தி உருவாகும்.
உலகக் கோப்பை தொடரின் போது ரோகித்-கோலி ஆகிய இருவர் இடையே கருத்து வேறுபாடு இருந்திருந்தால், ரோகித் ஷர்மா எவ்வாறு ஐந்து சதங்களை அடித்திருக்க முடியும்? இவ்வாறு சிறப்பாக விளையாடி வரும் வீரருடன் கோலி ஏன் பிரச்னையில் ஈடுபடவேண்டும்? அத்துடன் அவர்கள் இருவரும் பல போட்டியில் ஜோடி சேர்ந்து விளையாடினார். அது எவ்வாறு சாத்தியமாகும்?” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனக்கும் ரோகித் ஷர்மாவிற்கும் எந்தவித கருத்து வேறுபாடு இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.