`பெண்களுக்கு எதிரான தேசத்துடன் விளையாட விருப்பமில்லை எனத் தெரிவித்து, ஆஃப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடுவதிலிருந்து விலகிக் கொள்கிறோம்’ என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து `ஆஸ்திரேலியான பிபிஎல் டி20 தொடரில் விளையாடுவது குறித்து தீவிரமாக பரிசீலிப்பேன்’ என்று ஆஃப்கான் வீரர் ரஷித்கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலிபான் அமைப்பு ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியநிலையில், பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கும், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி, ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொடருலிருந்து ஆஸ்திரேலிய அணி விலகியிருக்கிறது. பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக தொடர்ந்து அடக்குமுறைகளை கடுமையாக செயல்படுத்தி வரும் தலிபான் அரசுக்கு எதிராக இந்த முடிவை எடுத்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளதாவது, “ஆஃப்கானிஸ்தான் உட்பட உலகெங்கிலும் உள்ள மகளிர் மற்றும் ஆடவர்களுக்கான விளையாட்டுகளின் முன்னேற்றத்துக்கு ஆஸ்திரேலியா ஆதரவாக உள்ளது. மேலும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து, அந்நாட்டு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கு ஆஸ்திரேலியா எப்போதும் பாடுபடும்” என்று தெரிவித்துள்ளது.
திடீரென ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி எடுத்துள்ள இந்த முடிவையடுத்து, `ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் எதிர்காலம் குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன்’ என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் ட்வீட் செய்துள்ளார். அதில், “மார்ச் மாதத்தில் எங்களுடனான தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறுவதாக அறிவித்ததைக் கேட்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். எனது நாட்டுக்காக விளையாடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் உலக கிரிக்கெட் அரங்கில் நாங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்து வரும் இந்த நேரத்தில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு எங்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சங்கடத்தை கொடுத்தால், பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடி யாருக்கும் சங்கடம் கொடுக்க நான் விரும்பவில்லை. எனவே, இப்போட்டியில் எனது எதிர்காலம் குறித்து தீவிரமாக பரிசீலிப்பேன். கிரிக்கெட் விளையாட்டுதான் எங்கள் நாட்டின் ஒரே நம்பிக்கை. ஆதலால் இதில் அரசியல் வேண்டாம்” என்று கேப்ஷனிட்டு இந்தப் பதிவை அவர் உருக்கமாக பதிவுசெய்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் பிரபல உள்ளூர் போட்டியான ஐபிஎல் போட்டி போன்று, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் Big Bash League (BBL) டி20 போட்டியில், அதிக விலைக்கொடுத்து எடுக்கப்பட்டவர் ரஷித்கான். இந்தநிலையில் தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த விலகல் முடிவால், ஐசிசியின் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தகுதிப் பெறுவதற்கான சூப்பர் லீக்கின் 30 புள்ளிகள் ஆஃப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலிய அணி இழக்க நேரிடும்.
எனினும், இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பரில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா ஏற்கனவே தகுதிப் பெற்றுவிட்டதால், இந்த 30 புள்ளிகள் பெரிய இழப்பாக அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.