பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் சுயநலமிக்கவர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி அங்கு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இப்போது அண்மையில் முடிவடைந்த டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் வென்றது. இதன் பின்பு டி20 போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதற்கான அணியை பாகிஸ்தான் தேர்வு செய்துள்ளது. அதில் மூத்த வீரர் முகமது ஹபீஸ் தேர்வு செய்யப்படவில்லை.
முகமது ஹபீஸ் அபுதாபியில் டி10 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். அந்தத் தொடரில் இருந்து வந்து நாடு திரும்பினால்தான் முகமது ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டு, கொரோனா விதிமுறைகளை மேற்கொண்ட பின்புதான் விளையாட அனுமதிக்கப்படுவார். ஆனால் ஹபீஸ் அபுதாபியில் இருந்து பாகிஸ்தான் திரும்பாதது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறும்போது,"சர்வதேச அணிகள் இப்போது பாகிஸ்தானுக்கு வர ஆரம்பித்து இருக்கின்றன. அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறார்கள். அபுதாபி டி10 போட்டியில் ஆசிப் அலி விளையாடுகிறார். ஆனாலும் அவர் பாகிஸ்தானுக்கு வந்துவிட்டார். ஆனால் முகமது ஹபீஸ் வரவில்லை. ஏனென்றால் ஹபீசுக்கு டி10 போட்டிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்பவில்லை. இதுதான் ஒருவருடைய மனநிலை தெரிகிறது" என்றார்.
மேலும் "பிக் பாஷ் கிரிக்கெட் தொடரை விட்டுவிட்டு ஹாரிஸ் ராஃப் கூட பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இணைந்தார். எது முக்கியம் என அவருக்கும் தெரிந்திருக்கிறது. உங்களுக்கு பாகிஸ்தான் முக்கியம் என்றால்தான் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என தெரியும். லீக் போட்டிகள்தான் முக்கியம் என நினைத்து தேசிய அணியில் இடம்பெறுவது இல்லாமல் போனால் நீங்கள் சரியான பாதையில் செல்லவில்லை. பாகிஸ்தான்தான் முக்கியம் என நினைக்க வேண்டும் சுயநலமாக இருக்கக் கூடாது" என்றார் ரமீஸ் ராஜா.