இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சாதனை புரியும் வீரர்களுக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவாக ராஜிவ் கேல் ரத்னா என்ற பெயரில் 1991ஆம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருது இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹாக்கியில் அரிய சாதனைகளை படைத்த ஜாம்பவான் தயான்சந்த் பெயரில் இந்தியாவின் உயரிய விளையாட்டு விருது வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததாகவும் அதை தங்கள் அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தயான்சந்த் உலகின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஹாக்கி மட்டையையும் பந்தையும் கொண்டு களத்தில் மாயாஜாலம் செய்வதில் தன்னிகரற்றவராக புகழப்படுபவர் தயான்சந்த். 1928, 1932,1936 என 3 ஒலிம்பிக்குகளில் தயான்சந்த் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றது. தயான்சந்தை கவுரவப்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.