சொதப்பிய ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு : கெத்துகாட்டிய கேகேஆர் பவுலர்கள்..!

சொதப்பிய ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு : கெத்துகாட்டிய கேகேஆர் பவுலர்கள்..!
சொதப்பிய ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு : கெத்துகாட்டிய கேகேஆர் பவுலர்கள்..!
Published on

ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை பஞ்சாப் அணிக்கு எதிராக எட்டியதால் இந்த முறையும் அதேபோன்று எவ்வளவு ரன்கள் இலக்கு என்றாலும் அடிக்கும் திறமை நம் அணி பேட்ஸ்மேன்களுக்கு உள்ளது என நினைத்து ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை எடுத்திருந்தார். ஆனால் இந்த முடிவு அவருக்கு பின்னால் பெரும் வீழ்ச்சியை தரும் என்பது அப்போது அவருக்கு தெரியாமல் இருந்தது.

முதல் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரரான சுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் 14 பந்துகளை சந்தித்த சுனில் நரைன் 15 ரன்களை மட்டும் எடுத்துவிட்டு வழக்கம்போல நடையை கட்டினார். பின்னர் வந்த நிதிஷ் ரானாவுடன் சுப்மான் கில் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதற்குள் நிதிஷ் ராணா 22 (17) ரன்களில் அவுட் ஆக, யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆண்ட்ரிவ் ரஸல் பேட்டை தூக்கிக்கொண்டு களத்திற்கு வந்தார். 33 பந்துகளில் 47 ரன்களை எடுத்திருந்த சுப்மான் கில், அரை சதம் அடிக்கமால் ஆர்ச்சர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் ஆனார்.

அவரைத் தொடர்ந்து வந்த வேகத்தில் கேப்டன் தினேஷ் கார்த்தி ஒரு ரன்னை மட்டும் எடுத்து நடையை கட்டினார். பெரிதும் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரிவ் ரஸல், 14 பந்துகளில் 24 ரன்களை மட்டுமே எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த இயான் மார்கன் பொறுப்புடன் பேட்டிங் செய்து 23 பந்துகளில் 34 ரன்களை சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. கொல்கத்தா பேட்டிங்கில் வழக்கம் போல சுனில் நரைனை தொடக்க வீரராக இறக்கியது பிழையானது. தினேஷ் கார்த்திக் தவிர மற்ற அனைவரும் குறிப்பிடத்தகுந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தனர். மொத்தத்தில் ஸ்டீவ் ஸ்மித் சேஸிங் கணிப்பை கொல்கத்தா பவுலர்கள் பகல் கனவாக மாற்றினர்.

கடைசி நேரத்தில் இயான் மார்கன் அடித்த ரன்கள் அணிக்கு பலமாக அமைந்தது. ராஜஸ்தான் பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அட்டகாசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மற்றபடி, ராஜ்பூட், டாம் குரான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்திருந்தாலும் இருவரும் ரன்களையும் 35க்கு மேல் கொடுத்திருந்தது குறையாக தெரிந்தது. அத்துடன் 4 ஓவர்களை வீசிய ஸ்ரேயாஸ் கோபால் விக்கெட் எடுக்க தவறியதுடன், 43 ரன்களையும் வாரிக்கொடுத்தது, கொல்கத்தா அணி ரன்களை குவிக்க வசதியானது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஃபீல்டிங்கில் கேட்ச் மிஸ் என சில சொதப்பல்கள் தென்பட்டன.

இதையடுத்து 175 ரன்கள் என்ற சவாலான இலக்கை எதிர்த்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 3 (7) ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டு நடையை கட்ட, பின்னர் வந்த சஞ்சு சாம்சானும் 8 (9) ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். தொடக்க வீரர் பட்லர் மட்டும் சற்று நேரம் களத்தில் நிற்க, 21 (16) ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் ராபின் உத்தப்பா 2 (2) ரன்கள், ரியான் பராக் ஒரு ரன் என வரிசையாக சென்றனர். இதையடுத்து ராகுல் திவாதியா மற்றும் டாம் குரான் ஜோடி சற்று நேரம் நிலைத்து நின்றது. ராகுல் திவாடியா சட்டென ஒரு சிக்ஸரை அடிக்க, கடந்த போட்டியைபோல இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எண்ணத்தோன்றியது. ஆனால் வருண் சக்கவர்த்தி பவுலிங்கில் பட்டென அவர் போல்ட் ஆகிச் சென்றார்.

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் கோபால் 5 (7) ரன்கள், ஜோஃப்ரா ஆர்ச்சர் 6 (4), ஜெயதேவ் உனாத் கட் 9 (13) ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதற்கிடையே யாரும் எதிர்பாராத வகையில் டாக் குரான் 35 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய கொல்கத்தா அணி, ராஜஸ்தான் வெற்றிப்பயணத்திற்கு புள்ளி வைத்தது. அத்துடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றுக்கு 2 போட்டிகளை வென்று 2வது இடத்திற்கும் முன்னேறியது.

ராஜஸ்தான் பேட்டிங்கில் ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், பட்லர் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நிற்காதது மைனஸாக அமைந்தது. மிடில் ஆர்டரில் ராபின் உத்தப்பா, ரியான் பராக் என ஃபார்மில் இல்லாத பேட்ஸ்மேன்களால் ராஜஸ்தான் அணிக்கு இலக்கை எட்டுவது எட்டாக்கனியானது. கடைசி நேரத்தில் டாம் குரான் அடித்த அரை சதத்தை முன்பே இறக்கிய பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் அடித்திருந்தால் வெற்றி வசமாகியிருக்கலாம்.

கொல்கத்தா பந்துவீச்சில் இளம் வீரர்களான சிவம் மவி, கம்லேஷ் நாகர்கோடி, வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் பந்துவீச்சு பெரும் பலமாக அமைந்தது. 3 பேரும் குறைவான ரன்களை கொடுத்தது மட்டுமின்றி தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியிருந்தனர். 3 ஓவர்கள் வீசிய பட் கம்மின்ஸ் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியது ராஜஸ்தான் அணியை முடக்கியது. சுனில் நரைன் மற்றும் குல்தீப் யாதவிற்கு மாற்றாக இரண்டு பவுலர்களை கொண்டு வந்தால் கொல்கத்தா அணி இன்னும் வலுவான வெற்றியை பெற்றிருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com