ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் ராஜஸ்தான்! வெற்றிப்பயணத்தை தொடருமா ஆர்சிபி?

ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் ராஜஸ்தான்! வெற்றிப்பயணத்தை தொடருமா ஆர்சிபி?
ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் ராஜஸ்தான்! வெற்றிப்பயணத்தை தொடருமா ஆர்சிபி?
Published on

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் வலுவான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தன் வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளன.

ஐபிஎல் 2022 இன் 13வது லீக் போட்டியில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இரு அணிகளும் தங்களின் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்று, அந்த வெற்றியின் வேகத்தைத் தொடரும் முனைப்பில் களமிறங்க உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை இரண்டு ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் சிறந்த நிகர ரன்-ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் அணியை சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார்.

மும்பைக்கு எதிராக சதமடித்து கலக்கிய ஜோஸ் பட்லர் ஆர்சிபிக்கு கடும் சவாலாக இருப்பார். தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ஹெட்மயர் என பலர் பேட்டிங்கில் கலக்குவதால் 180 ரன்களை எளிதாக அந்த அணி நெருங்குகிறது. இன்னும் பிரகாசிக்காமல் இருக்கும் ஜெய்ஸ்வால், ரியான் பராக் இந்த போட்டியில் தங்கள் பார்முக்கு திரும்பி எதிரணிக்கு அதிர்ச்சி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பந்துவீச்சிலும் ராஜஸ்தான் அணி மிகவும் வலிமையானதாகத் திகழ்கிறது. யஸ்வேந்திர சாஹல், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் க்ருஷ்ணா என பலமான பவுலிங் லைன் அப்போடு களமிறங்குகிறது. நடந்த 2 போட்டிகளிலும் பெரிதாக எந்த தவறும் செய்யாமல் வெற்றியை ருசித்த அந்த அணி, கச்சிதமான விளையாடி ஹாட்ரிக் வெற்றியை பெற போராடும் என்பதில் சந்தேகமில்லை.

மறுபுறம், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. இருப்பினும், பஞ்சாப் அணியை கட்டுப்படுத்த முடியாமல் பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. 2 வது ஆட்டத்தில் சுதாரித்து ஆடிய ஆர்சிபி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக வெற்றியைப் பெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தாவை ஆர்சிபி பவுலர்கள் திணறடித்து 128 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அசத்தினர். ஆனால் இந்த குறைந்த ரன் இலக்கையையும் இறுதி ஓவர் வரை பெரும் போராட்டத்தை நடத்தித் தான் எட்டி வெற்றி பெற்றது. முதல் போட்டியில் பவுலிங் வீக், 2வது போட்டியில் பேட்டிங் வீக், என்பதால் அடுத்த போட்டியில் எப்படி விளையாடும் என்பதை கணிக்கவே கடினமான அணியாக ஆர்சிபி திகழ்கிறது.

விராட் கோலி , கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இரண்டு நேர்த்தியான பவுண்டரிகளை அடித்த பிறகு, 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 41 ரன்களுடன் நன்றாகத் தொடங்கினார். அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸின் நட்சத்திர பந்துவீச்சு தாக்குதலுக்கு கடும் சவாலாக மாறுவார் என்பதில் சந்தேகமில்லை. பாப் டுபிளசிஸ், தினேஷ் கார்த்திக் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். கிளென் மேக்ஸ்வெல் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதால், அணியின் பேட்டிங்கிற்கு மேலும் பலம் கிடைக்கும். சிராஜ், வனிந்து ஹசரங்கா, ஆகாஷ் தீப் ஆகியோர் பவுலிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். கடந்த் சீசன் பர்பிள் கேப் வின்னர் ஹர்சல் படேல் இந்த ஆட்டத்தில் தன் பார்முக்கு திரும்பினால் ராஜஸ்தானின் வலுவான பேட்டிங்கிற்கு சிம்ம சொப்பனமாக திகழ வாய்ப்புண்டு.

வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடிய மூன்று ஆட்டங்களும் இதுவரை இரண்டாவது பேட்டிங் செய்வதற்கு சாதகமாக சென்றுள்ளன. அதன் முக்கியப் பகுதியானது பிற்பாதியில் விளையாடும் பனியாகும். இதுவரையிலான முடிவுகளின்படி டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடும் எனும்போதிலும், வெற்றிக்கான வாய்ப்பு பெங்களூரை விட ராஜஸ்தான் பக்கமே அதிகம் உள்ளது.

உத்தேச ஆடும் லெவன்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com