மிஸ்டர் ஐபிஎல் என கொண்டாடப்பட்ட சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் சீசனில் வர்ணனையாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவி சாஸ்திரியும் மீண்டும் வர்ணனையாளர் பணிக்கு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ஐபிஎல் சீசனில் வீரர்கள் ஏலத்தின்போது சுரேஷ் ரெய்னாவை அடிப்படை விலைக்குக் கூட எந்த அணியும் வாங்கவில்லை. மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் ரெய்னா ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் விற்கப்படாத வீரராக மாறிப்போனார். இதனால் சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் வர்ணனையாளராக அறிமுகம் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டியின் போது தனது அனுபவங்களை, ஆட்ட நுணுக்கங்களைப் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளராக பணிபுரிய ரெய்னாவை அணுகியபோது அவர் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது.
ஐபிஎல்லில் 5528 ரன்கள் குவித்துள்ள ரெய்னா லீக்கில் அதிக ரன் குவித்த வீரர் ஆவார். இதில் 1 சதம் மற்றும் 39 அரை சதங்கள் அடங்கும். 4 முறை ஐபிஎல் சாம்பியன் அணியில் இடம்பெற்றவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் தற்போது வர்ணனையாளர் பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சீசனில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வர்ணனையாளர் பணிக்கு திரும்புவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.