முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் சமித், இரண்டு மாதங்களுக்குள் சர்வ சாதாரணமாக இரண்டு முறை இரட்டை சதம் விளாசியுள்ளார்.
இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று பெயர் பெற்றவர் ராகுல் டிராவிட். 1996-ஆம் ஆண்டு இந்திய அணி சார்பாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய டிராவிட், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், டிராவிட் தொடக்க ஆண்டிலேயே 'சிறந்த ஆட்டக்காரர்' மற்றும் 'சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்' ஆகிய விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 2005-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் அந்த பதவியில் இருந்து 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விலகிக்கொண்டார்.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் தலா 10,000 ரன்களை கடந்து சாதனை புரிந்தவர் டிராவிட். டெஸ்ட் போட்டிகள் விளையாடும் பத்து அணிகளுக்கும் எதிராக சதம் எடுத்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் இவர்தான். 18 வீரர்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு சமயங்களில் 75-க்கும் மேற்பட்ட சதங்களை எடுக்க பங்களித்துள்ளார் டிராவிட். இது உலக சாதனையாக இன்று வரை இருக்கிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 16 ஆண்டுகள் நீடித்த ஒரு சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கையில், டிராவிட் 13,288 ரன்கள் டெஸ்ட் போட்டிகளிலும் 10,889 ரன்கள் ஒருநாள் போட்டிகளிலும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் இவரது மகன் சமித், கொல்கத்தாவில் நடந்த 14 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான போட்டியில் எதிரணியின் பவுலிங்கை, அடித்து துவம்சம் செய்து இரட்டை சதம் அடித்துள்ளார்.
144 பந்துகளில் 27 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் ஆகியவற்றுடன் 211 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். சமித்தின் அதிரடி ஆட்டத்தால் அவரது அணி 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய எதிரணியான பி.ஜி.எஸ் நேஷனல் பப்ளிக் ஸ்கூல் 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சமித்தின் பள்ளியான எம்.ஏ.ஐ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி 14 வயதிற்குட்பட்ட இடை மண்டல அளவிலான போட்டியில் 250 பந்துகளில் 201 ரன்களை சமித் டிராவிட் குவித்தார். இதற்கு முன்பாகவும் அவர் விளையாடிய 2 இன்னிங்ஸில் 295 ரன்களை சமித் எடுத்திருந்தார். 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் சமித் மூன்று அரைசதங்கள் அடித்தார். இந்த மூன்று அரைசதங்களும் அவரது அணி தொடரை கைப்பற்ற காரணங்களான அமைந்தன.
3-வது இடத்தில் களமிறங்கி இந்தியாவுக்காக விளையாடிய மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக ராகுல் கருதப்படும் நிலையில் சமித் தனது அப்பாவின் பேட்டிங் ஸ்டைலை பின்பற்றுவதாகவே தெரிகிறது.