3 போட்டியில் 26 விக்கெட்: சிராஜை புகழும் ராகுல் டிராவிட்!

3 போட்டியில் 26 விக்கெட்: சிராஜை புகழும் ராகுல் டிராவிட்!
3 போட்டியில் 26 விக்கெட்: சிராஜை புகழும் ராகுல் டிராவிட்!
Published on

முகமது சிராஜ் முதிர்ச்சியுடன் பந்துவீசி வருகிறார் என இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில், இந்திய போர்டு பிரசிடென்ட் அணியுடன் மோதிய போட்டி, டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்திய ஏ அணியுடன் அங்கீகாரமில்லாத நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 30 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இரண்டு இன்னிங்ஸில் சேர்த்து 10 விக்கெட் சாய்த்து அசத்தினார். மயங்க் அகர்வால் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்தார்.

இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் நடந்த முத்தரப்பு தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதுபற்றி இந்திய ஏ அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும்போது, ’இந்தப் போட்டியில் முகமது சிராஜ் முதிர்ச்சியுடன் பந்துவீசினார். கடந்த சில போட்டிகளில் அவர் மிரட்டலாக பந்துவீசிவருகிறார். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவர் ஜூனியர் கிரிக்கெட் அணியில் அதிகம் விளையாடியதில்லை என்றாலும் நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொண்டு விளையாடி வருகிறார். அவர் அருமையாக தன்னை வளர்த்துக்கொண்டு வருகிறார்.

அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. சுழல் பந்துவீச்சாளர் சேஹல் வெள்ளை பந்தில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்திருக்கிறார். ஆனால் சிவப்பு நிற பந்தில் அதிகம் விளையாடியதில்லை. கடந்த இரண்டரை வருடங்களாக அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்னும் அதிகமாக சிவப்பு பந்தில் விளையாடினால், அவருக்கும் அதில் அனுபவம் கிடைக்கும்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com