‘பாஜக இளைஞரணி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேனா?’ - அதிர்ச்சியுடன் டிராவிட் கொடுத்த விளக்கம்

‘பாஜக இளைஞரணி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேனா?’ - அதிர்ச்சியுடன் டிராவிட் கொடுத்த விளக்கம்
‘பாஜக இளைஞரணி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேனா?’ - அதிர்ச்சியுடன் டிராவிட் கொடுத்த விளக்கம்
Published on

தர்மசாலாவில் நடைபெறும் பாஜகவின் யுவ மோர்ச்சா தேசிய செயற்குழு கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கலந்துகொள்வதாக செய்திகள் வெளியானநிலையில், அதனை ராகுல் டிராவிட் மறுத்துள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில், பாஜக கூட்டணி 44 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளையும் வென்றது. இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில் பாஜக ஆட்சி அமைத்தது. வருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதியுடன் ஆட்சி முடிவுக்கு வரவுள்ளநிலையில், வருகிற நம்பவர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால் மீண்டும் அங்கு ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தற்போதே தீவிரம் காட்டி வருகின்றன. இதேபோல் டெல்லியை அடுத்து, பஞ்சாப்பில் களம் கண்டு வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சியும் முதல்முறையாக அங்கு தேர்தல் களத்தில் இறங்கி ஆட்சியைப்பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதனால் தற்போதே ஆளும் பாஜக கட்சி, கட்சியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு கூட்டங்களை கூட்டி வருகிறது. அந்தவகையில், பாஜக இளைஞர் அணி சார்பில் வரும் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில், 3 நாட்களுக்கு இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் யுவ மோர்ச்சா தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேசிய மற்றும் மாநில அளவிலான பாஜக உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கூட்டத்தில்தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு நல்ல கருத்துகளை கூற உள்ளதாக தர்மசாலா சட்டப்பேரவை உறுப்பினர் விஷால் நெஹ்ரியா தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "பாஜக இளைஞர் அணியான யுவ மோர்ச்சாவின் தேசிய செயற்குழு கூட்டம் தர்மசாலாவில் மே மாதம் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாஜகவின் தேசியத் தலைமை மற்றும் மாநிலத் தலைமையின் மேற்பார்வையின் கீழ் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் பங்கேற்கிறார். அவரது வெற்றிக்கதையின் மூலம் அரசியல் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சாதிக்கலாம் என்ற கருத்து இளைஞர்களுக்கு மத்தியில் கிடைக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதனை இந்திய கிரிக்கெட் வாரிய ஊடக மேலாளர் மௌலின் பரிக் மறுத்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு டிராவிட் போன் செய்ததாகவும், அந்த செய்தி உண்மையில்லை என தன்னிடம் டிராவிட் சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், “மே 12 முதல் 15 வரை இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் கூட்டத்தில் நான் கலந்து கொள்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கை தவறானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று ராகுல் டிராவிட் மறுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com