பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரஹ்மத் ஷா பெற்றார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சென்று, ஒரு டெஸ்ட் மற்றும் முத்தரப்பு டி-20 தொடரில் பங்கேற்கிறது. இந்த இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 77 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த அந்த அணியை ரஹ்மத் ஷாவும், அஸ்கார் ஆப்கனும் இணைந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா, தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். பின்னர் அடுத்த பந்திலேயே 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்துள்ளது. அஸ்கார் ஆப்கன் 88 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் அப்சர் ஸ்ஜாய் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர், டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பங்களாதேஷ் பந்துவீச்சாளர் என்ற சிறப்பை அவர் பெற்றார். அவர் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
சதம் அடித்தது பற்றி ரஹ்மத் ஷா கூறும்போது, ‘அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 98 ரன்களில் ஆட்டமிழந்தபோது வருத்தமடைந்தேன். இந்தப் போட்டியில் சதம் அடித்தது பெருமையாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் நான் தான் பெற்றிருந்தேன். இப்போது முதல் சதம் அடித்த வீரராகவும் மாறியிருக்கிறேன்’’ என்றார்.