தமிழக கிரிக்கெட் அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றது. இந்த ஆட்டத்தில் தமிழக வீரர் முரளி விஜய் ஆடவில்லை. போட்டி தொடங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன், அதாவது காலை 7.30 மணிக்கு, பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கரிடம், தனக்கு தோள் பட்டை வலி என்றும் தன்னால் இன்று ஆட முடியாது என்றும் கூறியுள்ளார் முரளி விஜய். முதலிலேயே சொல்லாமல் கடைசி நேரத்தில் சொன்னதால் அணியினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்தும் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. முரளி விஜய், தனது காயம் குறித்து அணி தேர்வாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்க்கு தகவல் தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
’மும்பையுடன் முக்கியமான போட்டி என்பதால், அதில் ஆடவில்லை என்றாலும் அவர் களத்துக்காகவாவது வந்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பிசிசிஐ கவனத்துக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம்’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மீதமுள்ள போட்டிகளுக்கான தமிழக அணியில் இருந்து முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரதோஷ் ரஞ்சன் பால் சேர்க்கப்பட்டுள்ளார். விஜய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தெரியவில்லை.