அரை இறுதிக்கு இந்தியா முன்னேற என்ன செய்ய வேண்டும்? - வேர்ல்ட் கப் திக்திக்

அரை இறுதிக்கு இந்தியா முன்னேற என்ன செய்ய வேண்டும்? - வேர்ல்ட் கப் திக்திக்
அரை இறுதிக்கு இந்தியா முன்னேற என்ன செய்ய வேண்டும்?  - வேர்ல்ட் கப் திக்திக்
Published on

உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்தியா இன்னும் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதுமானதாக உள்ளது. 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றதன் மூலம், அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. 

இந்நிலையில் எந்தெந்த அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறித்து ஆராய்வோம்.

இந்தியா:

இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் 4இல் வெற்றிப் பெற்று 9 புள்ளிகளுடன் உள்ளது. அத்துடன் இந்தத் தொடரில் தோல்வி அடையாத அணியாக இருந்து வருகிறது. எனவே இந்திய அணி எஞ்சியுள்ள 4 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெருவது உறுதியாகிவிடும்.

நியூசிலாந்து:

நியூசிலாந்து அணி 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியும் இந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு தோல்விகூட அடையாத அணியாக இருந்து வருகிறது. ஆகவே எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றாலே அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். 

ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியா அணி 6 போட்டிகளில் 5இல் வெற்றிப் பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணி அடுத்து விளையாடவுள்ள மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். ஆஸ்திரேலிய அணியை அடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது. எனவே இவற்றில் ஒன்றில் வெற்றி பெற வேண்டும். 

இதற்குமாறாக அடுத்த மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தோற்கும் பட்சத்தில் இலங்கை அணி அடுத்த 2 போட்டிகளில் தோற்கவேண்டும். அத்துடன் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு போட்டியில் தோற்கவேண்டும். அப்போது 10 புள்ளிகளுடன் உள்ள ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். 

இங்கிலாந்து:

இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியடைந்துள்ளது. இதனையடுத்து 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி உள்ளது. எனவே இங்கிலாந்து அணி அடுத்து வரும் 3 போட்டிகளில் கட்டாயமாக ஒரு போட்டிக்கு மேல் வெற்றி பெறவேண்டும். அவ்வாறு வெற்றிப்பெறாமல் இந்த மூன்று போட்டிகளிலுமே தோல்வியடைந்தால் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையில் வெளியேறும் அபாயம் ஏற்படும். 

ஏனென்றால் இங்கிலாந்து அணி 3 போட்டிகளிலும் தோற்றால் 8 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறவேண்டுமென்றால், இலங்கை அணி அடுத்து விளையாடவுள்ள அனைத்து போட்டிகளிலும் தோற்கவேண்டும். அத்துடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் எஞ்சியுள்ள போட்டியில் ஒன்றில் தோற்கவேண்டும். இத்தகைய சூழல் நடப்பது கடினம் என்பதால் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறும் வாய்ப்பு அதிகமாகும். 

இலங்கை:

இலங்கை அணி நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் உள்ளது. ஆகவே இலங்கை அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெறவேண்டும். அப்போதுதான் அரையிறுதி வாய்ப்பு அதிகமாகும். இதற்கு மாறாக இலங்கை அணி 2 போட்டிகளிலும் மட்டும் வெற்றிப் பெற்றால் 10 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற, இங்கிலாந்து அணி அடுத்து விளையாடவுள்ள மூன்றிலும் தோற்கவேண்டும். அத்துடன் பங்களாதேஷ் அணி எஞ்சியுள்ள போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிப் பெறவேண்டும். மேலும் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் தோற்கவேண்டும். இது நடந்தால் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். 

பாகிஸ்தான்:

பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் 5 புள்ளிகளுடன் உள்ளது. இந்த அணி அடுத்து நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றால் 11 புள்ளிகளுடன் இருக்கும். இந்தச் சமயத்தில் இங்கிலாந்து அணி எஞ்சியுள்ள போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெறவேண்டும். அத்துடன் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஒரு போட்டியில் தோல்வி அடையவேண்டும். இது நடந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.

வெஸ்ட் இண்டீஸ்: 

வெஸ்ட் இண்டீஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் உள்ளது. இந்த அணி அடுத்து இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிப் பெற்றால் 9 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது இங்கிலாந்து அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் தோற்கவேண்டும். அத்துடன் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் ஒரு போட்டிக்கு மேல் வெற்றி பெறக்கூடாது. அதேபோல பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் தோற்கவேண்டும். இந்த முடிவுகள் வரும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். 

பங்களாதேஷ்:

பங்களாதேஷ் அணி தற்போது 5 புள்ளிகளுடன் உள்ளது. இந்த அணி அடுத்து ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் விளையாடவுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றால் 11 புள்ளிகள் பெறும். அப்போது இலங்கை அணி அடுத்துள்ள அனைத்து போட்டிகளிலும் தோற்கவேண்டும். அத்துடன் இங்கிலாந்து அணி அடுத்து விளையாடும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டிக்கு மேல் வெற்றிப் பெறக் கூடாது. இந்த நிலை வந்தால் பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com