நான்கு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தி இந்தியா பி அணி சாம்பியன் பட்டத்தை வெற்று அசத்தியது.
இந்திய ‘ஏ’, இந்திய ‘பி’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் இறுதி போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதின.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்தது. அதன் அடிப்படையில் ஷார்ட் மற்றும் கவாஜா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கவாஜா 23 ரன்களில் வெளியேற அடுத்து கேப்டன் ஹெட் களமிறங்கினார். அவர் வந்த வேகத்திலே கோபால் பந்தில் நடையை கட்ட அந்த அந்த அணி 56 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பிறகு வந்தவர்களும் இந்திய பந்துவீச்சுக்கு தடுமாறினாலும் தொடக்க வீரர் ஷார்ட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 77 பந்துகளில் 9 பவுண்டர்களுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த அல்லெக்ஸ் கரே தன்பங்கிற்கு 53 ரன்கள் எடுக்க அந்த அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 225 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், சித்தார்த் கவுல், நவுதீப் மற்றும் தீபக் ஹூடா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதன்பின் 226 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பி அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் இசாந்த் கிஷன் களமிறங்கினர். இசாந்த் கிஷன் 13 ரன்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக பெவிலியன் திரும்ப மயங்க் அகர்வாலுடன் ஷுப்மன் கில் இணைந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 67 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 சிக்சர்கலும், 9 பவுண்டரிகளும் அடங்கும். அதன் பின் களமிறங்கிய கேப்டன் மணிஷ் பாண்டே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய இளம் வீரர் ஷுப்மன் கில் அரை சதம் கடந்து அசத்தினார். இறுதில் இந்திய பி அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 36.3 ஓவர்களிலே 230 ரன்கள் குவித்து எளிதாக வெற்றிபெற்றது. இதன் மூலம் இத்தொடரில் இந்திய ‘பி’ சாம்பியன் வெற்று அசத்தியது. இந்திய பி அணி சார்பில் ஷப்மன் கில் 66 ரன்களுடனும், கேப்டன் மணிஷ் பாண்டே (73 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மணிஷ் பாண்டே பெற்றார்.