இந்திய ‘ஏ’, இந்திய ‘பி’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்திய ஏ அணியும் தென்னாப்பிரிக்க ஏ அணியும் மோதின. முதலில் ஆடிய இந்திய ஏ அணி, தென்னாப்பிரிக்க ஏ அணியின் சிறப்பான பந்துவீச்சால் 37.3 ஓவர்களில் 157 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக தீபக் சாஹர் 38 ரன்னும் சஞ்சு சாம்சன் 36 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
(பேட்டர்சன்)
தென்னாப்பிரிக்க ஏ அணி தரப்பில் பேட்டர்சன் 5 விக்கெட்டையும் மகளா, பிரைலின்க் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து ஆட்டத்தைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க ஏ அணி, 37.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில், அதிகப்பட்சமாக பீட்டர் மலன் 47 எடுத்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டையும் குணால் பாண்ட்யா 2 விக் கெட்டையும் மயங்க் மார்கண்டே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மற்றொரு போட்டியில் இந்திய பி அணியும் ஆஸ்திரேலிய ஏ அணியும் மோதின. முதலில் ஆடிய இந்திய பி அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. கேப்டன் மணீஷ் பாண்டே அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 117 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மயங்க் அகர்வால் 36 ரன்னும் இஷான் கிஷான் 31 ரன்னும் தீபக் ஹூடா 30 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய ஏ ஆணி ஆடியது. 24.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழைக்குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி இலக்கு 40 ஓவரில் 247 ரன்கள் என மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி அந்த அணி 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி பந்தில் வைடர்முத் சிக்ஸ் அடித்ததால் இந்த வெற்றி கிடைத்தது.
(கவாஜா)
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா அபாரமாக ஆடி 93 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேக் வைடர்முத் 42 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். ஆட்ட நாயகன் விருது கவாஜாவுக்கு கிடைத்தது.
லீக் சுற்று முடிவில் தலா 12 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ள இந்திய பி அணியும் ஆஸ்திரேலிய ஏ அணியும் பைனலுக்கு முன்னேறியுள்ளன. இந்த இறுதிப் போட்டி 29ஆம் தேதி நடக்கிறது. தலா 9 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய ஏ அணியும் தென்னாப்பிரிக்க ஏ அணியும் 3 வது இடத்துக்கான போட்டியில் விளையாடுகிறது.