கத்தார் கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் குரோசியாவை எதிர்கொள்ளும் அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? ஓர் அலசல்.
1990 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி இத்தாலி நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் கால்பந்து ஜாம்பவான் மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிவரை சென்றது. நூலிழையில் கோப்பையை நழுவவிட்ட போதும் அந்த போராட்ட குணம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த தொடரில் இறுதி வரை அர்ஜென்டினா கடந்து வந்த பாதையை சிலர் தெரிந்திருப்பார்கள் பலர் அறியாமல் இருப்பார்கள். அவர்களுக்குகான நினைவூட்டல் பதிவு இது.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் டிவியை கண்டிராத காலம் அது. உயரமான ஆண்டனா வைத்து கருப்பு வெள்ளை டிவியில் காட்சிகளை கண்டுகளித்த கல்வெட்டு காலம். பணம் படைத்த செல்வந்தர்கள் வீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கலர் டிவி தலைகாட்ட ஆரம்பித்த காலம்.
அப்போதுதான் இத்தாலியில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. கண்கவர் கால்பந்து போட்டியை கலர் டிவியில் பார்க்க ஆசைப்பட்டு வீடு வீடாக அழைத்தோம். டிவி இருந்தது ஆனால், மேட்ச் போடவில்லை. நள்ளிரவு நேரம் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் இருந்தால்தானே போடுவார்கள் என மனதை தேற்றிக் கொண்ட நேரத்தில் திண்டுக்கல் யூனியன் கிளப்பில் மேட்ச் போடுவதாக சொன்னார்கள் அதுவும் கலர் டிவியில், விடுவோமா, விரைந்தோம் அங்கு....
கத்தக் கூடாது கைதட்டக் கூடாது அமைதியா பாக்கணும் என்ற கடும் நிபந்தனைகளோடு உள்ளே அனுமதிக்கப்பட்ட நம் கண்ணில்பட்டது. அந்த கலர் டிவி. அதிசயம், ஆச்சரியம், பிரமிப்பு கண்கள் டிவியை கொள்ளைகொண்டது. அப்போதுதான் அர்ஜென்டினா அணியும் கேமரூன் அணியும் களத்தில் இறங்கிக் கொண்டிருந்தனர். மாரடோனாவை டிவியில் க்ளோசில் காட்டியபோது அருகே இருந்த நண்பர் உணர்ச்சிவசப்பட்டு தலைவா என கத்தியபடி கைதட்டியது தான் தாமதம். தம்பி... அமைதியா ஒக்காரு இல்லாட்டி வெளியே... என சத்தம் வந்த திசையை நோக்கி முறைக்காமல் முறைத்தவர் அதன் பிறகு கப்சிப் ஆனார்.
கோப்பையை வென்ற அணி என்பதால் அர்ஜெண்டினா மீது முழு எதிர்பார்ப்பு..
மாரடோனா தலைமையிலான நட்சத்திர வீரர்களை கொண்ட அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் கேமரூன் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், அர்ஜென்டினா எளிதாக வென்றுவிடும் என எதிர்பார்த்து ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.. இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததற்கான காரணம் 1986 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை மாரடோனா தலைமையிலான வென்று புகழின் உச்சத்தில் இருந்தது. மாரடோனாவின் பெயர் உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான நகரங்களை தாண்டியுமே மாரடோனாவின் பெயர் அறிமுகமாகி இருந்தது. இன்றைய சச்சின், தோனியைப் போல் அன்று மாரடோனா உலக முழுவதும் அறியப்பட்ட நட்சத்திர வீரராக இருந்தார். அதனால்தான் மாரடோனா தலைமையிலான அணி மீது அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பையை வென்ற அணி அல்லவா.. இருக்கத்தானே செய்யும்.. ஆனால், முதல் போட்டியிலே அதிர்ச்சிதான் காத்திருந்தது.
முதல் போட்டியில் வீழ்ந்த அர்ஜெண்டினா!
கேமரூன் வீரர் ரோஜர் மில்லா ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். அதன்பிறகு முரட்டுத்தனமாக விளையாண்ட கேமரூன் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் ரெட்கார்டு வாங்கி வெளியே சென்ற நிலையில், 9 பேருடன் விளையாடிய கேமரூன் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1:0 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணியிடம் அர்ஜென்டினா வீழ்ந்தது. அதன் பிறகு வீறுகொண்டு எழுந்த அர்ஜென்டினா தொடர் வெற்றிகளை பெற்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிவரை சென்றது.
அதேபோல் தான் தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவில் இடம் பெற்றிருந்த அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் சவூதி அரேபியா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. முதல் போட்டியை ஆர்வமுடன் மைதானத்திலும், உலகம் முழுவதும் உள்ள வண்ண திரைகளிலும் கண்டுகளித்துக் கொண்டிருந்த அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு குறிப்பாக மெஸ்ஸி ரசிகர்களுக்கு பேரரதிர்ச்சியாக அமைந்தது.
இருப்பினும் அடுத்தடுத்து நடைபெற்ற மெக்சிகோ அணியுடனான போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் வென்ற அர்ஜென்டினா, போலந்து அணியுடனான போட்டியிலும் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தது.
இதையடுத்து நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து களம்கண்ட அர்ஜென்டினா 2:1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர் கொண்ட அர்ஜென்டினா 2:2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்ததால் டைபிரேக்கர் முறையில் 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
1990 உலகக் கோப்பை கால்பந்து தொடர் போலவே கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரிலும் தோல்விக்குப் பிறகு வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதால் கத்தார் உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்லும் என் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் குரோஷியா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வென்று மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? 1978, 1986 ஆம் ஆண்டு போல் மீண்டும் கோப்பை தனதாக்கிக் கொள்ளுமா? அல்லது 1990, 2014 ஆண்டுகளைப் போல் இறுதிப் போட்டிவரை சென்று கோப்பையை நழுவ விடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.