ஸ்விஸ் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து புசானன் ஓங்பாம்ருங்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஸ்விஸ் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் ஆகிய இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். துவக்கம் முதலே அதிரடியாக விளையாடத் துவங்கிய சிந்து 3-0 என முன்னிலை பெற்றார், ஆனால் புசானன் சுதாரித்து ஆடி நல்ல தரமான ஷாட்களை அடித்து 7-7 என மாற்றினார்.
புசானன் சிந்துவை வலையிலிருந்து விலக்கி வைக்க முயன்றார். அவளை மைதானம் முழுவதும் நகர்த்தினார். ஆனால் புசானன் சில தவறான ஷார்ட்களை ஆட, அது சிந்துவுக்கு சாதகமாக அமைத்தது. முதல் சுற்றின் முடிவில் 21-16 புள்ளிகளுடன் அந்த செட்டை சிந்து தன்வசமாக்கினார்.
2வது சுற்றில் புசானன் தனது ஏமாற்று மற்றும் டிராப் ஷாட்களைப் பயன்படுத்தினார். ஆனால் ஆக்ரோஷமாக விளையாடிய சிந்து ஆட்டம் முழுவதும் ஆதிக்கத்தைச் செலுத்தினார். 21-8 என்ற கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றினார். இரண்டு செட்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து.
புசானனுடன் 17 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள சிந்து, இன்றைய போட்டியையும் சேர்த்து மொத்தம் 16 போட்டிகளை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2019ல் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து பெற்ற 2வது பட்டம் இதுவாகும்.