“பெண்களின் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது” - மார்பக புற்றுநோய் பற்றி பிவி சிந்து
மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்விற்காக பிவி சிந்துவின் ஹாலோகிராம் படிமம் வைக்கப்பட உள்ளது.
பெண்கள் எதிர்கொள்ளும் நோய்களில் மார்பக புற்றுநோய் மிகவும் முக்கியமான நோயாக மாறியுள்ளது. இதனை ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்பதால் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை வைத்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பி.வி.சிந்துவின் முப்பரிமான படிமம் (ஹாலோகிராம்) செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக பிவி சிந்து ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “மார்பக புற்றுநோய் என்பது பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது. இதனைத் தடுக்க ஒரே வழி தொடக்கத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவதே ஆகும். எனக்கு தெரிந்த இரண்டு பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். நான் ஏற்கெனவே மருத்துவர் ரகுராமின் ‘பிங்க் ரிப்பன் வாக்’ என்ற மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு அமைப்பில் பங்குபெற்று வருகிறேன். இதனால் இந்த மார்பக புற்றுநோய் குறித்த ஹாலோகிராம் வைப்பதற்கு நான் உடனே சம்மதித்தேன்.
பெண்கள் தங்கள் குடும்பத்தினரின் உடல்நிலையில் அக்கரை காட்டுவதை போல அவர்களின் உடல்நிலையில் அக்கரை காட்டுவதில்லை. ஆகவே இந்த விழிப்புணர்வின் மூலம் பெண்கள் தங்களின் உடல்நிலையில் மிகவும் கவனம் செலுத்த வேண்டுமே என்பதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விழிப்புணர்விற்கு முக்கிய காரணமாக இருந்த மருத்துவர் ரகுராம்,“ஒவ்வொரு வருடமும் 70ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றனர். அத்துடன் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார்.
மேலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 70 சதவிகித பெண்கள் தங்கள் நோயின் கடைசி கட்டத்திலேயே மருத்துவர்களை வந்து பார்க்கின்றனர். ஆகவே பெண்களிடம் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இந்தப் புதிய முயற்சிக்கு பிவி சிந்து ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தப் புதிய முயற்சியால் கிராம புற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்” எனக் கூறினார்.