2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்தவர் பி.வி.சிந்து.
தற்போது அவர் லண்டனுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து பி.வி.சிந்து தனது பெற்றோரிடமும், பயிற்சியாளர் கோபி சந்திடமும் கோபித்துக் கொண்டு லண்டன் சென்றுள்ளதாக அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
இந்நிலையில், செய்திகளில் வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார் சிந்து.
“சில நாட்களுக்கு முன்னர் தான் எனது ஊட்டச்சத்து மற்றும் சில தேவைக்களுக்காக லண்டனில் இயங்கி வரும் GSSIக்கு வந்தேன். இங்கு நான் எனது பெற்றோரின் அனுமதியுடன் தான் வந்துள்ளேன். எங்கள் குடும்பத்திற்குள் எந்தவித குழப்பமும் இல்லை. எனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த எனது பெற்றோர்களிடம் கோபித்துக் கொள்ள வேண்டிய தேவை என்ன உள்ளது.
அதே சமயத்தில் எனது பயிற்சியாளர் கோபி சந்துடனும் எனக்கு எந்தவித சங்கடங்களும் இல்லை.
என்னை குறித்த உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ளாமல் தவறான செய்திகளை எழுதி, வெளியிட்ட அந்த ஆங்கில நாளேட்டின் பத்திரிகையாளர் அவரது செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடைமுறைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிந்து தெரிவித்துள்ளார்.