பேர்ஸ்டோ, ஜித்தேஷ் ஷர்மா ஆகியோரின் அபார ஆட்டத்தால், சாஹலின் சுழலையும் மீறி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக 189 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்
இன்று நடைபெற்று வரும் முதல் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி தரப்பில் தவானும் பேர்ஸ்டோவும் களமிறங்கினர். ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி பஞ்சாப்பின் ரன் கணக்கை துவக்கினார் பேர்ஸ்டோ. தவானும் தன் பங்குக்கு அதிரடியாகவே ஆட்டத்தை துவக்கினார்.
3வது ஓவரை வீசிய போல்ட் மிக அபாரமாக அந்த ஓவரை வீசி, ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் அந்த ஓவரை மெய்டன் ஓவராக்கினார். கூல்தீப் சென் வீசிய அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி, ரன் தேக்கத்தை ஈடுசெய்தார் பேர்ஸ்டோ. அடுத்து போல்ட் வீசிய 5வது ஓவரில் இருவரும் இணைந்து 2 பவுண்டரி , ஒரு சிக்ஸர் விளாச அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறத் துவங்கியது.
ஆனால் அஸ்வின் சுழலில் சிக்கி தவான் அவுட்டாக, பனுகா ராஜபக்சே களமிறங்கினார். பனுகாவும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி பேர்ஸ்டோ பக்கம் முழு அழுத்தமும் சேராமல் பார்த்துக் கொண்டார். இருவரும் இணைசேர்ந்து பஞ்சாப் பவுலிங்கை பதம்பார்க்க, 10 ஓவர்களில் 88-1 என்ற நிலையில் வலுவாக ரன் குவித்து இருந்தது பஞ்சாப்.
ஆனால் இந்த கூட்டணியை தன் சுழல் மூலம் தகர்த்தெறிந்தார் சாஹல். அவர் வீசிய பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார் பனுகா. அடுத்து வந்த கேப்டன் மயங்க் அகர்வால் பொறுப்பாக விளையாடி ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக் கோட்டுக்கு விரட்டிக் கொண்டிருந்தார். மறுபக்கம் 35 பந்துகளை மட்டும் சந்தித்து அரைசதம் விளாசினார் பேர்ஸ்டோ.
நிலைப்பெற துவங்கிய இந்தக் கூட்டணிக்கும் வில்லனாக வந்தார் சாஹல். அவர் வீசிய சுழலில் சிக்கி மயங்க் அகர்வால் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின் தொடர்ந்து பேர்ஸ்டோவும் சஹாலிடம் சிக்கி எல்பிடபுள்யூ ஆகி வெளியேற பஞ்சாப் அணி தடுமாறத் துவங்கியது. மிக முக்கிய டெத் ஓவர்களில் கூட்டணி சேர்ந்தனர் லிவிங்ஸ்டனும் ஜித்தேஷ் சர்மாவும்.
இருவரும் பொறுப்பாக விளையாடி, ஏதுவான பந்துகளில் மட்டும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாச ஸ்கோர் மீண்டும் உயரத் துவங்கியது. 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசி 22 ரன் சேர்த்த நிலையில் பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். இறுதியாக குல்தீப் சென் வீசிய கடைசி ஓவரில், ஜித்தேஷ் ஷர்மா 2 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி அசத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. அபாரமாக பந்துவீசிய சஹால் 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மின்னல் வேகத்தில் ஸ்கோர் எழுந்துவந்த ஸ்கோரை, தன் சுழலால் ஸ்பீட் ப்ரேக்கர் போட்டு நிறுத்தினார் சஹால். ஆனால் மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் எளிதாக 180 ரன்களை கடந்துவிட்டது பஞ்சாப் அணி. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ராஜஸ்தான் அணியில் பட்லர் உடன் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கினார். சந்தீப் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ஜெய்ஸ்வால். அந்த முதல் ஓவரில் 14 ரன்கள் எடுத்துள்ளது. அதேபோல், ரபாடா வீசிய நான்காவது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசிய பட்லர் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பட்லர் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன் எடுத்துள்ளது.