பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டன், அர்ஸ்தீப் சிங் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தால் 159 ரன்களை குவித்தது டெல்லி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்று வரும் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியின் ஓப்பனர்களாக டேவிட் வார்னர் மற்றும் சர்பராஸ் கான் களமிறங்கினர். முதல் பந்திலேயே வார்னரை டக் அவுட் ஆக்கி அதிர்ச்சி அளித்தார் பஞ்சாப் பவுலர் லிவிங்ஸ்டன்.
அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் நிதானமாக ஆடத் துவங்கி, ரபாடா வீசிய 2வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். நிதானமாக ஆடிக் கொண்டிருந்த்ய சர்பராஸ் கானும் ஹர்ப்ரீத் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி அதகளம் செய்தார். ரிஷி தவான் வீசிய ஓவரிலும் 2 பவுண்டரிகளை விளாசிய சர்பராஸ், அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் சிக்கி அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய லலித் யாதவும் நிதானமாக விளையாடியதால், பவர்பிளே முடிவில் 59 ரன்களை குவித்தது டெல்லி அணி.
ராகுல் சஹார் ஓவரில் சிக்ஸர் விளாசிய லலித் யாதவ், தொடர்ந்து நிதானமாகவே பேட்டிங் செய்து வந்தார். அர்ஸ்தீப் ஓவரில் சிக்ஸர் விளாசி அதிரடிக்கு மார்ஷ் திரும்ப, அவர் வீசிய பந்தில் ராஜபக்சேவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் லலித் யாதவ். லிவிங்ஸ்டன் வீசிய ஓவரில் அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு, அடுத்த பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரோவ்மென் பவலும் லிவிங்ஸ்டனிடம் சிக்கி அவுட்டாக டெல்லி அணி கடும் நெருக்கடிக்கு ஆளானது.
அடுத்து மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் நிதானமாக விளையாடினார். துவக்கத்தில் அதிரடி காட்டிய மார்ஷ் அடுத்து நிதானமாக விளையாடி பவுண்டரி விளாசியபடி அரைசதம் கடந்தார். அதன்பின் மீண்டும் அதிரடிப் பாதைக்கு திரும்பிய மார்ஷ் அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். ஆனால் ரபாடா வீசிய அடுத்த ஓவரில் மார்ஷும் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷர்துல் தாகூரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக 20 ஓவர்கள முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன், அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.