கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஏற்கனவே ஒரு இரட்டைச் சதம் விளாசிய புஜாரா, வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக மூன்றாவது சதம் விளாசி அசத்தினார்.
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடும் புஜாரா, வொர்செஸ்டர்ஷயர்-க்கு எதிரான போட்டியில் தொடர்ந்து மூன்றாவது சதத்தை அடித்தார். அவர் 184 பந்துகளில் இந்த இலக்கை எட்டினார். மோசமான வெளிச்சம் காரணமாக இன்னும் 13 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தபோது அவர் 16 பவுண்டரிகளுடன் 206 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் பின்வந்த வீரர்கள் கடகடவென அவுட்டாக ஆல் அவுட் ஆகி “பாலோ-ஆன்” ஆகியது சசெக்ஸ் அணி. அடுத்து விளையாடிய 2வது இன்னிங்சிலும் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் வொர்செஸ்டர்ஷயர் அணி இன்னிங்ஸ் மற்றும் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக டெர்பிஷயர் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் அடித்திருந்தார். கவுண்டி சாம்பியன்ஷிப்பில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். முகமது அசாருதீன் 1991 இல் லீசெஸ்டர்ஷைருக்கு எதிராக 212 ரன்களும், 1994 இல் டர்ஹாமுக்கு எதிராக 205 ரன்களும் எடுத்தார்.
புஜாராவின் கடைசி சர்வதேச சதம் ஜனவரி 2019 இல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரைத் அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் இருந்து மூத்த பேட்ஸ்மேன் ஆன புஜாரா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டைச் சதம், அதை தொடர்ந்த மற்றொரு சதம் ஆகியவை டெஸ்ட் ஆட்டங்களில் அவரின் இருப்பை நிரூபிக்கும் வகையில் அடிக்கப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.