இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில் புஜாராவின் அபார சதத்தால் இந்திய அணி 273 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.
Read Also -> கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பத்ரிநாத்!
இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தது. தவானும் 3 ரன்களுடனும் கே.எல்.ராகுலும் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. அணியின் ஸ்கோர் 37 ஆக இருந்த போது, பிராட் வேகத்தில் எல்பிடபிள்யூ ஆனார் கே.எல்.ராகுல். அவர் 19 ரன்கள் எடுத்தார். அடுத்து புஜாரா வந்தார். அவரும் தவானும் நிதானமாக ஆடி வந்தனர். 17.5 ஓவரில், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிராட் வீசிய பந்தை அடிக்க முயற்சித்த தவான், விக்கெட் கீப்பர் பட்லரால் கேட்ச் செய்யப்பட்டார். அவர் 23 ரன்களில் பெவிலியன் திரும்ப, கேப்டன் கோலி வந்தார். அவரும் புஜாராவும் நிதானமாக ஆடினர்.
சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராத் கோலி, கர்ரன் பந்துவீச்சில் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், புஜாரா - ரஹானே ஜோடி சற்று நேரம் நிலைத்தது. ஆனால், ரஹானே 11 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் இந்திய அணியின் சரிவு தொடங்கியது. ரிஷாப் பான்ட் (0), ஹர்திக் பாண்ட்யா (4 ரன்), அஸ்வின் (1 ரன்), முகமது ஷமி (0) ஆகியோரை அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் சாய்த்தார் மொய்தின் அலி. இதனால், 200 ரன்களை எட்டுவதற்குள் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்தது. 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய இஷாந்த் ஷர்மா, புஜாராவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆறுதல் தந்தார். அவர் தனது பங்குக்கு 14 ரன்கள் எடுத்தார். அப்போது புஜாரா 96 ரன்களுடன் இருந்தார். இஷாந்த் அவுட் ஆனதும், புஜாரா சதத்தை அடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் கடைசி விக்கெட்டுக்கு வந்த பும்ரா, அவருக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் புஜாரா 210 பந்துகளில் சதம் அடித்தார். இங்கிலாந்து மண்ணில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இறுதியில் பும்ரா 6 ரன்னில் பிராட் பந்துவீச்சில் கேட்ச் ஆக, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி, 273 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
பின்னர் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அலஸ்டைர் குக்கும் (2 ரன்) ஜென்னிங்ஸூம் (4 ரன்) களமிறங்கி ஆடிவருகின்றனர். மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடர்கிறது.